ஆன்டிகுவா: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. 3-0 என்ற கணக்கில் டி20 தொடரும், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரையும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22 முதல் 26 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 03 வரையும் நடைபெற உள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய மற்றும் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவாவில் நடந்தது. இந்த பயிற்ச்சி ஆட்டத்திற்கு ரஹானே தலைமை தாங்கினார். இந்த போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பயிற்ச்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 56.1 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
116 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளன 3-வது நாளில் இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவுற்றதால் ஆட்டம் டிரா ஆனது.