பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹரீஸ் ரவூப் மற்றும் ஷகீன் அப்ரிடி உள்ளனர். இருவருக்கும் இந்த உலக கோப்பை எதிர்பார்த்தளவுக்கு அமையவில்லை. முதல் சில போட்டிகளில் அடிவாங்கிய ஷகீன் அப்ரிடி பார்முக்கு திரும்பியிருக்கும் நிலையில், இப்போது ஹரீஸ் ரவூப் மோசமான பந்துகளை வீசி படுமோசமாக அடிவாங்கி வருகிறார். பெங்களுரில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஹரீஸ் ரவூப் பந்துவீச்சை குறிவைத்து வெளுத்து வாங்கினார்கள். 8 ஓவர்களை வீசிய ஹரீஸ் ரவூப் 83 ரன்களை வாரி வழங்கினார். அதேநேரத்தில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி
உலக கோப்பையில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் இன்று பாகிஸ்தான் அணியை பெங்களூரில் எதிர்கொண்டது. அந்த அணியில் ஓப்பனிங் இறங்கிய வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் இருவரும் சதம் விளாசி அமர்களப்படுத்தினர். ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் 259 ரன்கள் எடுத்திருந்தபோது தான் விழுந்தது. மிட்செல் மார்ஷ் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.
டேவிட் வார்னர் இமாலய சாதனை
அவர் அவுட்டானாலும் களத்தில் இருந்த டேவிட் வார்னர் அதிரடியை நிறுத்தவில்லை. தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுகளை வெளுத்து வாங்கிய அவர் 85 பந்துகளில் சதமடித்தார். உடனே புஷ்பா பட ரியாக்ஷனை செய்து மைதானத்தில் இருந்து ரசிகர்களை குஷப்படுத்தினார் அவர்.
ஒருநாள் போட்டியில் வார்னரின் 21வது சதம் இது. உலக கோப்பையில் டேவிட் வார்னரின் 5வது சதமாகும். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 47வது சதமாக அமைந்தது. மேலும், அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இப்போது 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் இதுவரை 7 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். முதல் இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அவர் 8 முறை 150 ரன்களுக்கும் மேல் விளாசியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் புள்ளிப் பட்டியல்
இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வியுடன் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் 4வது இடத்தில் உள்ளது. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அரையிறுதிக்கான வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டி என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஒரு சில போட்டிகளில் அடையும் தோல்வி, அரையிறுதிக்கான வாய்ப்பை கணிசமான அளவில் குறைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ