புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி அடைந்த வீரர்களில் ஒரு மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி கிரிக்கெட் உலகின் உச்சத்தை அடைந்தது. இவரது தலைமையில் தான் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக்கோப்பைகளான 50 ஓவர், 20 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை இந்திய அணி வென்றது. ஐசிசி அமைப்பின் மூன்று கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் மகேந்திர சிங் தோனி சாரும். கிரிக்கெட் உலகில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.
இத்தகைய சாதனைகளை செய்த மகேந்திர சிங் தோனி எப்பொழுது கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற விவாதம் 2019 உலகக்கோப்பைக்கு பிறகு சூடு பிடித்துள்ளது. 38 வயதாகும் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. எனினும் டோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
ஆனால் டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசிய முன்னால் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியது, தோனி கண்டிப்பாக தற்போதைக்கு ஓய்வு பெறமாட்டார் எனத் தோன்றுகிறது. தோனி ஓய்வு பெறப் போகிறாரா? இல்லையா? எனத் தெரியாத நிலையில், 20-20 உலகக்கோப்பை அணியை தயார் செய்ய அடுத்தகட்ட முடிவைக் குறித்து சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதாவது தோனிக்கு மாற்று வீரராக மூன்று விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம். அவர்களை உலகக்கோப்பைத் தொடருக்கு தயார் செய்யலாம் என தெரிவித்துள்ளார். அதாவது ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.