என்னப்பா இது... 5 ஓவரில் மூன்று கேட்ச்கள் மிஸ் - இந்தியாவின் பீல்டிங் ரொம்ப வீக்!

Asia Cup 2023, IND vs NEP: நேபாள அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே மூன்று எளிய கேட்ச்களை தவறவிட்டது ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 4, 2023, 06:53 PM IST
  • ஷ்ரேயஸ், விராட், இஷான் கிஷன் ஆகியோர் கேட்ச்களை தவறவிட்டனர்.
  • வெற்றிகரமான கேட்ச்களை பிடித்த அணிகளில் இந்தியா 9ஆவது இடத்தில் உள்ளது.
  • 2019க்கு பின் சுமார் 25% கேட்ச்களை இந்தியா தவறவிட்டுள்ளது.
என்னப்பா இது... 5 ஓவரில் மூன்று கேட்ச்கள் மிஸ் - இந்தியாவின் பீல்டிங் ரொம்ப வீக்! title=

Asia Cup 2023, IND vs NEP: ஆசிய கோப்பை தொடர் கடந்த ஆக. 30ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த தொடர் ஹைஃப்ரீட் முறையில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி உள்பட மொத்தம 13 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மட்டும் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடுகிறது. மற்ற அணிகள் குறைந்தபட்சம் ஒரு போட்டியாவது பாகிஸ்தானில் விளையாடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகியவை குரூப் ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவை குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், இந்தியா - நேபாளம் அணிகள் மோதும் குரூப் சுற்று போட்டி இலங்கையின் கண்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் ஏற்கெனவே, பாகிஸ்தான் அணியுடன் மோதிவிட்டன. 

இது குரூப்-ஏ சுற்று அணிகளின் கடைசி போட்டியாகும். நேபாளம் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியுற்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் முடிவின்றி ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. அதன்மூலம், பாகிஸ்தான் சூப்பர்-4 சுற்றுக்கு ஒட்டுமொத்தமாக முதல் அணியாக தகுதிபெற்றது. எனவே, இந்தியா சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழல் உள்ளது. 

அணியில் ஷமி

அந்த வகையில், இன்றைய போட்டியும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. பொதுவாக கத்துக்குட்டி அணிகள் என சொல்லப்படும் வரிசையில் நேபாளம் இருந்தாலும், தற்போதைய சூழலில் எந்த அணி வேண்டுமானாலும் சரியான விதத்தில் விளையாடினால், எந்த வலிமையான அணியை வீழ்த்தலாம் என்றாகிவிட்டது. இதற்கு, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் உதாரணமாக உள்ளது. இந்நிலையில், இந்தியா - நேபாளம் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

மேலும் படிக்க | இன்னொரு அம்பத்தி ராயுடுவாக மாறிப்போன சஞ்சு சாம்சன்! இப்படி நடந்துருச்சே

மழைக்கு வாய்ப்புள்ளதால் மட்டுமின்றி கடந்த போட்டியில் பந்துவீச முடியாமல் போனதால் இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான ரிதமிற்கு வரும் வகையில் டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்திருப்பதாக ரோஹித் தெரிவித்தார். மேலும், பிளேயிங் லெவனில் பும்ராவுக்கு பதில் ஷமி சேர்க்கப்பட்டார். பும்ரா அவருக்கு குழந்தை பிறந்திருப்பதால் மும்பை திரும்பியிருப்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

ஆரம்பமே அதிர்ச்சி

தொடர்ந்து, பந்துவீச வந்த இந்திய பந்துவீச்சாளர்களுக்கு முதல் ஓவரிலேயே பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில், தொடக்க பேட்டர் புர்டெல் கொடுத்த கேட்சை ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்ற ஷ்ரேயஸ் ஐயர் தவறிவிட்டார். இது சற்று பின்னடைவாக அமைய, அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மற்றொரு கேட்ச் தவறிவிடப்பட்டது. 

விராட் தந்த அதிர்ச்சி

சிராஜ் வீசிய அந்த ஓவரில், இந்த முறை கேட்சை கோட்டைவிட்டவர் விராட் கோலி. முதல் கேட்சை விட மிக எளிதாக வந்த அந்த பந்தை விராட் கோலி தவறவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. மேலும், இந்திய அணியின் பீல்டிங் குறித்த பலத்த கேள்விகளையும் எழுப்பியது. விராட் கோலியின் தவறால் ஆசிஃப் சேக் தப்பித்தார். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் அடுத்த சம்பவமாக ஷமி வீசிய 5ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில், எளிய கேட்ச் ஒன்றை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் தவறவிட்டார். இரண்டாவது முறையாக புர்டெல் தப்பித்தார். 

கேட்சில் கோட்டை விடும் இந்தியா

இப்படி ஐந்து ஓவர்களுக்குள் மூன்று முறை கேட்சை தவறவிட்டது களத்தில் மட்டுமின்றி, களத்திற்கு வெளியேவும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி கேட்ச்களை தவறவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்தியா அணி நூற்றுக்கு 75.1% கேட்சுகளை மட்டுமே பிடித்துள்ளது. வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் வெற்றிகரமான கேட்ச் சதவீதம் பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது கடைசிக்கு முந்தைய இடம். 71.2% சதவீதத்துடன் ஆப்கானிஸ்தான் கடைசி இடமான 10ஆவது இடத்தில் உள்ளது. வரும் உலகக் கோப்பையில் இது பெரும் தாக்கத்தை அளிக்கும் என சொல்லப்படுகிறது. 

வெளிச்சத்திற்கு வரும் பலவீனங்கள்

இந்திய அணியின் தொடக்க கட்ட பந்துவீச்சு சற்று பலவீனமாகவே காணப்பட்டது எனலாம். கேட்ச்கள் தவறவிடப்பட்டாலும் பேட்டர்களை அச்சுறுத்தம் வகையிலான பந்துவீச்சு சிராஜ் மற்றும் ஷமியிடம் இன்று காணப்படவில்லை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இதில், புர்டெல் கிரீஸில் இருந்து இறங்கி வந்து அடித்த பல்வேறு ஷாட்கள் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களிடம் போதிய வேகம் இல்லை என்பதை காட்டுகிறது எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங், ஓப்பனிங் பந்துவீச்சும் உலகக் கோப்பை தொடருக்கு முன் சீர்செய்யப்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஓப்பனர் அரைசதம் 

அதிரடியாக விளையாடி வந்த புர்டெல் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 38 ரன்களை எடுத்திருந்தார். இந்த கேட்சை இஷான் கிஷான் பொறுமையாக பிடித்தார் எனலாம். ஷமி, சிராஜ் ஓவர்களுக்கு பின் பாண்டியா, ஷர்துல் பந்துவீச வந்தனர். தொடர்ந்து, ஜடேஜா தாக்குதலுக்கு வந்து அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, அவர்களின் மிடில் ஆர்டரை கலைத்தார். இருப்பினும், அவர்களின் மற்றொரு ஓப்பனரான ஆசிஃப் சேக் 88 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

அசத்திய கோலி

தொடர்ந்து, 30ஆவது ஓவரில் சிராஜ் வீசிய 5ஆவது பதில் சேக் 57 ரன்கள் எடுத்தபோது, விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் சிராஜ் பந்து வீச்சில் சேக்கின் கேட்சை தவறவிட்ட கோலி, இந்த கேட்சை பிடித்து அதை சரிசெய்துகொண்டார் எனலாம். மேலும், இந்த கேட்சை ஒற்றை கையால் பிடித்து கோலி அசத்தினார். தற்போது 30 ஓவர்கள் முடிவில் நேபாளம் 134 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. 

மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் அணி இந்த நாட்டுடன் இதுவரை விளையாடியது இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News