Super Over: கேப்டன் கில்லி ரோஹித்... சூப்பர் ஓவரில் ஸ்மார்ட்டான யோசனை - இந்தியா ஜெயித்தது இப்படிதான்!

IND vs AFG 3rd T20 Super Over: இந்தியா - ஆப்கானிஸ்தான் 3ஆவது டி20 போட்டியின் இரண்டாவது சூப்பர் ஓவரில், ரோஹித் சர்மாவின் புத்திசாலித்தனமான யோசனையால் வெற்றி கிடைத்தது. அதை இதில் விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 18, 2024, 11:34 AM IST
  • ஆப்கானிஸ்தான் அணியே சூப்பர் ஓவரில் சுழற்பந்துவீச்சை நம்பவில்லை.
  • 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆப் ஸ்பின்னர் வாஷிங்டனை நம்பாமல் லெக் ஸ்பின்னர் பிஷ்னோய் வீசினார்.
  • சூப்பர் ஓவரில் விக்கெட்டுகளை எடுத்தே ஆக வேண்டும் என் நோக்கத்துடன் ரோஹித் சென்றார்.
Super Over: கேப்டன் கில்லி ரோஹித்... சூப்பர் ஓவரில் ஸ்மார்ட்டான யோசனை - இந்தியா ஜெயித்தது இப்படிதான்! title=

IND vs AFG 3rd T20 Super Over Highlights: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி (IND vs AFG 3rd T20) நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. டி20 உலகக் கோப்பைக்கு முன் நடைபெறும் கடைசி சர்வதேச டி20 போட்டி என்பதால் இந்திய அணி சில பரிசோதனை முயற்சியையும் மேற்கொண்டது.

பல பரிசோதனை முயற்சிகள்

கடந்த இரு போட்டிகளாக சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோருக்கு பதிலாக ஆவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் ஜித்தேஷ் சர்மாவுக்கு பதில் களமிறங்கினார். கடந்த இரு போட்டிகளாக சேஸிங் செய்த இந்திய அணி, இம்முறை டாஸை வென்றும் முதல் பேட்டிங்கை தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா (Rohit Sharma) ஓப்பனிங்கில் இறங்க, மூன்றாவது ஓவரில் இருந்து இந்திய அணிக்கு சரிவு தொடங்கியது. ஜெய்ஸ்வால் 4, விராட் கோலி 0, தூபே 1, சஞ்சு சாம்சன் 0 என தொடர்ந்து அவுட்டாகி வெளியேற 22 ரன்களில் இந்தியா நான்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

மேலும் படிக்க | IND vs AFG: சூப்பர் ஓவர்களால் வெற்றி பெற்ற இந்தியா! தொடரையும் கைப்பற்றியது

காப்பாற்றிய ரோஹித் - ரின்கு ஜோடி 

ரோஹித் - ரின்கு சிங் (Rinku Singh) அங்கிருந்து ஜோடி கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பில் 212 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 69 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 121 ரன்களையும், ரின்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 69 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தொடர்ந்து, ஆப்கான் சேஸிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்து ஆட்டத்தை டிரா செய்தது. அதிகபட்சமாக குல்புதீன் நயீப் 55, குர்பாஸ் 50, இப்ராஹிம் சத்ரான் 50, நபி 34  ரன்களை குவித்தனர். வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுலை வீழ்த்தியிருந்தார். தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் 16 ரன்களை அடிக்க, இந்திய பேட்டர்களும் 16 ரன்களை அடித்து அதையும் டிரா செய்தனர். எனவே, இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது.

இரண்டு சூப்பர் ஓவர்

இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா முதல் பேட்டிங் செய்து 11 ரன்களை சேர்தது. 12 ரன்கள் என்ற இலக்கை ஆப்கன் துரத்தியது. அந்த ஓவரை ரவி பிஷ்னோய் வீச வந்தார். முதல் பந்திலேயே நபி ரின்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்ட, மூன்றாவது பந்திலும் குர்பாஸ் நேராக ரின்கு கையில் கேட்ச கொடுத்து அவுட்டானார். இதன்மூலம், இந்திய அணி சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக ஷிவம் தூபேவும் தேர்வானார்கள். 

மேலும் படிக்க | எனது சிறந்த ஆட்டங்களுக்கு இந்த வீரர்தான் காரணம் - நன்றி கூறிய ஷிகர் தவாண்

இதில், சூப்பர் ஓவரில் சுழற்பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோயை (Ravi Bishnoi) பந்துவீச செய்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சுழற்பந்துவீச்சுக்கு பெயர் போன ஆப்கானிஸ்தான் அணியே சுழற்பந்துவீச்சாளரை நம்பி சூப்பர் ஓவரை கொடுக்காத நிலையில், ரோஹித் சர்மா ரவி பிஷ்னோயிடம் பந்தை கொடுத்தது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்தது. ஆவேஷ் கான் மற்றும் பிஷ்னோய் ஆகியோரில் ரோஹித் பிஷ்னோயை தேர்வு செய்துள்ளார்.

தைரியமான முடிவு

ரோஹித்தின் இந்த முடிவு குறித்து ராகுல் டிராவிட் (Rahul Dravid) கூறுகையில்,"ரோஹித் தனது தைரியமான முடிவுடன் சென்றார் என்று நினைக்கிறேன், இது அவரின் முடிவுதான். அந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்துவதற்கு சுழற்பந்து வீச்சாளர் ஒரு சிறந்த ஆப்ஷன் அவருக்கு தோன்றியிருக்கிறது. 11 ரன்கள் என்பது பெரிய ஸ்கோராக இல்லாத ஆட்டங்களில் ஒன்றாக இந்த போட்டி இருந்தது.

மேலும் அவர்கள் அந்த ஆறு பந்துகளையும் பேட் செய்தால், அவர்களிடம் இருந்த பலத்துடன், அவர்கள் 12 ரன்களையும் எடுத்திருப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும். நிச்சயம், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். சுழற்பந்து வீச்சாளரை பந்துவீச வைத்தது, கேப்டனிடம் இருந்து வந்த சிறந்த முடிவு என்று நான் நினைக்கிறேன்" என ரோஹித்தை புகழந்தார்.

பிஷ்னோயின் அற்புத பந்துகள்

மேலும் ரவி பிஷ்னோய் குறித்து டிராவிட் (Rahul Dravid) கூறுகையில்,"அவர் பந்தில் இரண்டு சிக்ஸர்களையும் அடித்திருக்கலாம். ஆனால் பிஷ்னோய் புத்திசாலி, ஏனென்றால் அவர் இரண்டு அற்புதமான பந்துகளை வீசினார். லெந்தை பின்னோக்கி இழுத்து வீசினார்... லெந்த் சற்று முன்னாடி போயிருந்தால், அவர்கள் பேட்டிங் செய்யும் விதத்தில், இந்த சிறிய மைதானத்தில் அது சிக்ஸருக்கு சென்றிருக்கும். 

மற்றவர்கள் நினைப்பது போல் ஒரு தடுப்பாட்டத்தை நோக்கி செல்லாமல், விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டும் என்ற தைரியமான முடிவோடு களமிறங்கிய ரோஹித்திற்கு பாராட்டை தெரிவிக்க வேண்டும்" என்றார். மேலும், இந்த போட்டியில வென்றதன் மூலம் அதிக சர்வதேச டி20 போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற மைல்கல்லை ரோஹித் எட்டினார். ரோஹித் 42 போட்டிகளில் கேப்டனாக வெற்றி பெற்றுள்ளார், தோனி 41 போட்டிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். 

மேலும் படிக்க | தோனி முதல் கோலி வரை! ராமர் கோவில் திறப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News