உலக கோப்பை கிரிக்கெட் அணி தேர்வில் IPL எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்!
தற்போது பரபரப்பாக நடைப்பெற்று வரும் IPL தொடர் முடிவடையும் சில தினங்களுக்கு பின்னர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கவுள்ளது. உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் போட்டியாக இந்தியாவிற்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே வரும் ஜூன் 5-ஆம் போட்டி நடைபெறுகிறது. எதிர்வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 நபர் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுக்க IPL போட்டிகளை பலரும் உற்று கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோகித் ஷர்மா இது குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்... "50 ஓவர் போட்டிக்கும் 20 ஓவர் போட்டிக்கும் வித்தியசங்கள் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய வீரர்கள் குறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதேப்போல் குறைய டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இப்போட்டிகளில் வீரர்களின் திறனை பார்த்து வரும் உலக கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுப்பதே நியாயம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் IPL போட்டிகள் மற்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட உதவினாலும், IPL தொடர்களில் விளையாடும் வீரர்களின் திறனை மட்டும் வைத்து அவர்களின் தேர்ந்தெடுத்துவிட முடியாது என்று தெரிவிதுள்ளார். இவையனைத்தும் தனது சொந்த கருத்து என குறிப்பிட்ட அவர், அணி தேர்வில் தேர்வு குழு பலமான அணியை உருவாக்க சிறப்பாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக உலக கோப்பை அணி தேர்வில் IPL தாக்கம் இருக்குமா என அணி தலைவர் கோலியிடம் கோட்டதற்கு, விராட் கோலியும் உலக கோப்பை அணி தேர்விற்கும் IPL தொடருக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அணி தலைவர் விராட் கோலியின் கருத்தினையே துணை தலைவர் ரோகித் ஷர்மாவும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.