லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் மைதானதிற்கு மேல் விமானங்கள் ஏதும் பறக்ககூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான், இந்தியா அணிகள் பங்கேற்ற போட்டிகளின் போது பலூசிஸ்தான் மற்றும் காஷ்மீர் தொடர்பான அரசியல் செய்திகளுடன் கொடிகளை ஏந்திய விமானங்கள் மைதானத்தின் மீது பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து அத்துமீறி பறந்த விமானங்கள் குறித்து அதிகாரப்பூர்வ புகார்கள் ICC மற்றும் BCCI தரப்பில் அளிக்கப்பட்டது. இப்புகார்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது இறுதி போட்டியின் போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மைதானத்தை சுற்றியுள்ள பகுதி "no-fly zone"-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை வரும் ஜூலை 15-ஆம் தேதி அன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கிரிக்கெட் நிர்வாக குழு வெளியிட்டள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் 29-ஆம் தேதி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, "பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்" என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 6-ஆம் நாள் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ICC துணையுடன் BCCI வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.