நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருந்து வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி உள்ளது. இந்த மசூதியில் இன்று நண்பகல் தொழுகை நடந்தது. அப்போது, திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.
இதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள், பலர் தரையில் படுத்துக்கொண்டனர்.
இதைபோன்று கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணியினர், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதிக்கு செல்ல இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர்.