IPL 2023: மாஸ் த்ரில்லர்! கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள்... குஜராத்தை சம்பவம் செய்த ரிங்கு சிங்!

IPL 2023 GT vs KKR: ஐபிஎல் தொடரின் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 9, 2023, 08:32 PM IST
  • ரஷித் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியும் குஜராத் தோல்வி.
  • ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.
  • அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
IPL 2023: மாஸ் த்ரில்லர்! கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள்... குஜராத்தை சம்பவம் செய்த ரிங்கு சிங்! title=

IPL 2023 GT vs KKR: நடப்பு ஐபிஎல்  13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்தித்தது. இப்போட்டி, குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

தெறிக்க விட்ட தமிழர்கள்

குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை ரஷித் கான் கவனித்துக்கொண்டார். டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த முடிவு ஆரம்பத்தில் அந்த அணிக்கு நல்ல பலனை தான் அளித்தது. 

அந்த அணியில், அதிகபட்சமாக விஜய் சங்கர் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 24 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். இதில், 4 சிக்ஸர்கள் கடைசி ஓவரில் அடிக்கப்பட்டது. மற்றொரு வீரர் சாய் சுதர்ஷன் 53 ரன்களை எடுத்திருந்தார். இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் அதிரடியில், அந்த அணி 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து, 204 ரன்களை குவித்தது. சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மெகா இலக்கு 

தொடர்ந்து, 205 ரன்கள் என்ற மெகா இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. குஜராத் அணியில் சாய் சுதர்ஷனுக்கு பதிலாக ஜோஷ் லிட்டில் இம்பாக்ட் பிளேயராக உள்ளே கொண்டுவரப்பட்டார். கொல்கத்தா அணியில், சுயாஷ் சர்மாவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார். 

மேலும் படிக்க | CSKvsMI: ரோகித்துக்கு பாடம் கற்பித்த தோனி - மும்பையில் சம்பவம் செய்த சிஎஸ்கே..!

மோசமான தொடக்கம்

கொல்கத்தா அணிக்கு குர்பாஸ், நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினாலும் இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை. குர்பாஸ் 15  ரன்களில் ஷமி பந்துவீச்சிலும், ஜெகதீசன் 6 ரன்களில் லிட்டில் பந்துவீச்சிலம் ஆட்டமிழந்தனர். அடுத்த இம்பாக்ட் பிளேயராக வந்த வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஷ் ராணாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். 

இம்பாக்ட் ஏற்படுத்திய வெங்கேடஷ்

இதனால், கொல்கத்தாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி, 100 ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்தபோது, ராணா 45(29) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுப்புறம் அதிரடி காட்டி வந்த வெங்கடேஷ் ஐயரும் 83(40) ரன்களில் அல்ஸாரி ஜோசப்பிடம் வீழ்ந்தார். இதில், 5 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடக்கம். இந்த சூழலில் போட்டி கொல்கத்தாவின் கையில்தான் இருந்தது. 

ரஷித் கான் ஹாட்ரிக்

அப்போது, 17ஆவது ஓவரை ரஷித் கான் வீச வந்தார். முதல் மூன்று பந்திலேயே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் என மூவரையும் டக்-அவுட்டாக்கி ஐபிஎல் தொடரில் தனது முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்து மிரட்டினார். தற்போது போட்டி அப்படியே கொல்கத்தா பக்கம் சாய்ந்தது. அப்போது கேகேஆர் அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ரிங்கு சிங் களத்தில் இருந்தார்.

18ஆவது ஓவரை ஷமியும், 19ஆவது அல்ஸாரி ஜோசப்பும் கட்டுக்கோப்புடன் வீசிச்செல்ல, கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பெரிதும் அனுபவம் இல்லாத யாஷ் தாக்கூர் வீச வந்தார். முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் சிங்கிள் அடிக்க, ரிங்கு சிங் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். 

கடைசி ஓவர் த்ரில்

குஜராத் தான் வெற்றி பெறும் நினைத்திருந்த நேரத்தில், அடுத்த 5 பந்துகளிலும் அடுத்தடுத்து சிக்ஸர்களை நாலாபுறமும் பறக்கவிட்டு, ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்கு த்ரில் வெற்றியை தேடி தந்தார். இதன்மூலம், கொல்கத்தா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி, தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும், இத்தொடரில் குஜராத்தின் முதல் தோல்வியாகும். ரிங்கு சிங் ஆட்டநாயகனாக தேர்வானார். அவர் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 48 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. 

புள்ளிப்பட்டியல் 

இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றியும் , 1 தோல்வியையும் பெற்ற நிலையில், ரன்ரேட் அடிப்படையில் கேகேஆர் அணி 2ஆம் இடத்திலும், குஜராத் 4ஆம் இடத்திலும் உள்ளன. தற்போது ராஜஸ்தான் முதலிடத்திலும், லக்னோ 3ஆவது இடத்திலும் உள்ளன.  

மேலும் படிக்க | IPL 2023: ஒரே நாளில் 3 பேரிடம் அடுத்தடுத்து மாறிய ஆரஞ்சு தொப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News