IPL 2023: விராட் பட்டறையில் மீண்டும் ஒரு வேகப்புயல்... இந்த முறை யார் தெரியுமா?

Avinash Singh Manhas Biography: கிரிக்கெட் திறைமைகளை அடையாளம் காண்பதில் ஐபிஎல் பெரும் வரப்பிரசாதமாகும். அந்த வகையில், மணிக்கு 150+ கி.மீ., வேகத்தில் வீசும் இந்திய அறிமுக வேகப்பந்துவீச்சாளரை இந்த முறை ஆர்சிபி ஏலத்தில் எடுத்திருந்தது. ஜம்முவை சேர்ந்த அவினாஷ் சிங் மான்ஹாஸ் என்ற வீரர் இந்த ஐபிஎல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் வீரர் எனலாம். இவர் குறித்து சில தகவல்கள் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 28, 2023, 04:43 PM IST
  • ஆர்சிபி நடத்திய பயிற்சி முகாமில், பயிற்சியாளர்கள் இவரை கண்டடைந்துள்ளனர்.
  • இவரின் தந்தை ஜம்முவில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
  • இந்த தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இருப்பதால், இவர் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
IPL 2023: விராட் பட்டறையில் மீண்டும் ஒரு வேகப்புயல்... இந்த முறை யார் தெரியுமா? title=

RCB Avinash Singh Manhas Biography: இந்தியன் பிரிமீயர் லீக் என்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்னும் கொஞ்சம் நாட்களில் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடர் கடந்த 15 சீசனில் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கே பெரும் கொடை அளித்திருக்கிறது எனலாம். ஃபிரான்சைஸ் கிரிக்கெட் (Franchise Cricket) எனப்படும் புதிய கிரிக்கெட் கலாச்சாரத்தின் அரசனாக ஐபிஎல் தொடர் விளங்குகிறது. 

ஐபிஎல் எனும் பெரும் வாசல்!

இந்தியாவின் தெருக்கள் தோறும் கிரிக்கெட் சென்றடைந்திருந்தாலும், தொழில்முறையாக கிரிக்கெட்டில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் பின்தங்கிய ஊர்களில் இருக்கும் இளைஞர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடர் அதனை எளிதாக்கியுள்ளது எனலாம். 

குறிப்பாக, இந்திய அணிக்கு இதுவரை ஐபிஎல் கொடுத்த கொடை ஏராளம். பாண்டியா சகோதரர்கள், சிராஜ் உள்ளிட்ட மிகவும் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்தவர்களுக்கு ஐபிஎல் தொடர்தான் வாசலாக இருந்தது. 

இதனால், ஒவ்வொரு ஐபிஎல் தொடங்கும்போதும் இந்த முறை எந்த வீரர் இந்திய அணிக்கு தகுதிபெறவார் அல்லது எந்த அறிமுக வீரர் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிறைந்திருக்கும். 

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே-வில் விளையாடப்போகும் 11 வீரர்கள்! லீக் ஆனா லிஸ்ட்!

புது வேகப்புயல்

அந்த வகையில், இந்த ஐபிஎல் தொடரிலும் பல அறிமுக வீரர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றாலும், பெங்களூரு அணியில் இடம்பிடித்திருக்கும் அவினாஸ் சிங் மான்ஹாஸ் என்பவர் குறித்து இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இவர் குறித்து குறிப்பிட தகுந்த முக்கியமான விஷயம் 24 வயதான இவர், இதுவரை ஒரு முதல் தர போட்டியில் கூட விளையாடவில்லை. அதுவும் இவர் மணிக்கு 145+ கி.மீ., வேகத்தில் தொடர்ந்து பந்துவீசக்கூடியவராக உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பெங்களூரு அணி இவரை ரூ. 60 லட்சத்திற்கு எடுத்தது. 

முதல்தர போட்டியில் விளையாடதில்லை!

இந்தியாவின் நடுத்தர குடும்பம் என்பது கிரிக்கெட்டை தொழில்முறையாக நினைத்துக்கூட பார்க்க இயலாது என்ற நிலையில், ஜம்முவைச் சேர்ந்த அவினாஷ் சிங் மான்ஹாஸின் தந்தை ஆட்டோ ரிக்சா ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தபோது, அவரின் தந்தை அஷோக் சிங் மான்ஹாஸ்,"இந்த வாய்ப்பைப் பெற என் மகன் மிகவும் கஷ்டப்பட்டான். அவனுக்கு நானும் அவரது தாயாரும் அவருக்கு உறுதுணையாக இருந்தோம்" என கூறியிருந்தார். இவை வழக்கமான வார்த்தையாக தெரியலாம், ஆனால மிக அடர்த்தியானது. 

முதல்தர போட்டியில் அனுபவமில்லாத இவர், 2022ஆம் ஆண்டில்தான் லெதர் பந்தில் பந்துவீசி பழகியுள்ளார். மினி ஏலத்தில் இவரை தேர்வுசெய்த பின், பெங்களூரு அணியின் பயிற்சியாளர்களுள் ஒருவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மாலோலன் ரங்கராஜன்,"இந்த ஏலம் ஆர்சிபியின் Hinterland Scouting எனப்படும் எங்கள் அணியின் மற்ற பிரிவிற்குள் நுழைய ஒரு வாய்ப்பாக அமைந்தது. "எங்கள் AI பார்ட்னரின் உதவியுடன் இவர்போன்ற திறமைகளை அடையாளம் நாங்கள் காண்கிறோம். 

ஆர்சிபி பட்டறையில் புதுவரவு!

நாங்கள் ஜம்மு காஷ்மீர் சென்றபோது, அங்குள்ள அவினாஷ் சிங்கை அடையாளம் கண்டுகொண்டோம். அப்போது இருந்து, அவர் எங்களின் எதிர்பார்ப்புகளை திருப்தி செய்துவந்தார். அதில் ஒன்று, மிக முக்கியமானது, அவர் 145 கி.மீ., வேகத்தில் பந்து வீசவதுதான். அவர் எதிர்காலத்தில் 150 கி.மீ., வேகத்தில் வீசுவார் என எதிர்பார்க்கிறோம்" என கூறியிருந்தார். 

மேலும், கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை, ஆர்சிபியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளரான ஆடம் கிரிஃபித்திடம் இவர் பயிற்சிபெற்றுள்ளார். ஆர்சிபி அணி தேர்வு செய்து, அவர்களின் பட்டறையில் கூர்த்தீட்டப்பட்ட சிராஜ் தற்போது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 வீரராக உருமாறியுள்ளார். இந்த தொடரில் நிச்சயம் கவனிக்கப்படும் வீரராக அவினாஷ் இருப்பார். 

பெங்களூரு அணியில், ஹர்ஷல் படேல், சிராஜ் ஆகியோர் இருக்கும் நிலையில் இவரை பிளேயிங் லெவனில் எடுப்பது சற்று கேள்விக்குறி என்றாலும், தற்போதைய இம்பாக்ட் பிளேயர் விதிப்படி இவரை ஆட்டத்தில் பெங்களூரு அணி பயன்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. 

விராட் கோலி வேகப்பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்பதால், அவினாஷ் சிங் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இவர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில், ஆர்சிபிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் பெரும் வரவா(மா)கதான் இருக்கும். 

மேலும் படிக்க | வொர்க் அவுட் செய்யும் தல தோனியின் தலை வீடியோ! தலையை கொஞ்சம் காட்டுங்க! வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News