209 ரன் இலக்கை 17.3 ஓவர்களில் ‘சேசிங்’ செய்து குஜராத்தை வெளியேற்றியது டெல்லி அணி.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணி 209 ரன் இலக்கை சேசிங் செய்து குஜராத் அணியை வெளியேற்றியது.
10-வது ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் ஜெயித்த டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தனது பேட்டிங்கை தொடங்கிய குஜராத் லயன்ஸ் சுமித்தும், மெக்கல்லமும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். மெக்கல்லம் 1 ரன்னில் கேட்ச் ஆனார். 2 பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கிய சுமித் 9 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சுரேஷ் ரெய்னாவும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியா விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோரும் கிடுகிடுவென உயர்ந்தது.
இருவரும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசித்தள்ளினர். 10.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்ட குஜராத் அணியின் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக நகர்ந்தது. ரவீந்திர ஜடேஜா கடைசி இரு பந்துகளை சிக்சருக்கு தூக்கியடித்து 200 ரன்களை கடக்க வைத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
பின்னர் 209 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. கேப்டன் கருண் நாயர் 12 ரன்னில் அவுட் ஆனார் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டும், சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து, சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இடைவிடாது பறந்த சிக்சர்களால் டெல்லி அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.
சாம்சன் தனது பங்குக்கு 61 ரன்களும் (31 பந்து, 7 சிக்சர்), ரிஷாப் பான்ட் 97 ரன்களும் (43 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) திரட்டி வெற்றிப்பயணத்தை எளிதாக்கினர்.டெல்லி அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னுடனும் (8 பந்து, 2 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 18 ரன்களுடனும் (12 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தில் மொத்தம் 31 சிக்சர் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10-வது ஆட்டத்தில் விளையாடி 4-வது வெற்றியை பெற்றது டெல்லி அணி. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று தகுதி பெரும். அதே சமயம் 8-வது தோல்வியை தழுவிய குஜராத் அணி பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.