ஐபிஎல் 2017: பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Last Updated : Apr 24, 2017, 01:52 PM IST
ஐபிஎல் 2017: பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. குஜராத் அணியில் ஜேம்ஸ் பாக்னர், பிரவீன் குமார், இஷான் கிஷன், தவல் குல்கர்னி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் ஆண்ட்ரூ டை, ஆகாஷ்தீப் நாத், நாது சிங், சுபம் அகர்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

மேலும் அந்த அணியின் வீரரான டுவைன் பிராவோ காயம் காரணமாக இந்த தொடர் முழுதும் ஆடமாட்டார் என்று கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு மனன் வோரா, கே.சி.கரியப்பா, நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.

பஞ்சாப் அணி 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் மனன் வோராவின் விக்கெட்டை இழந்தது. 2 ரன்களை எடுத்திருந்த அவர், நாது சிங்கின் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 

முதல் விக்கெட் குறைந்த ரன்களில் விழுந்த போதிலும் அதை ஈடுகட்டும் வகையில் ஆம்லா - ஷான் மார்ஷ் ஜோடி ஆடியது. 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் பவுண்டரிகளாக விளாச, பஞ்சாப் அணி 5.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. அணியின் ஸ்கோர் 81 ரன்களாக இருந்தபோது, ஷான் மார்ஷ் (30 ரன்கள்) ஆட்டம் இழந்தார்.

கடந்த போட்டியில் சதம் அடித்த ஹசிம் ஆம்லா, 30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 40 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்த நிலையில் அகர்வாலின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 18 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்த மேக்ஸ்வெல் அவுட் ஆக, பஞ்சாப் அணியின் ரன் குவிக்கும் வேகம் சற்று குறைந்தது. கடைசி நேரத்தில் அக்ஷர் படேல் 17 பந்துகளில் குவித்த 34 ரன்களின் உதவியால் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களைச் சேர்த்தது.

வெற்றிபெற 189 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த குஜராத் அணி, 50 ரன்களை எட்டுவதற்குள் மெக்கலம் (6 ரன்கள்), பின்ச் (13 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் 24 ரன்களை சேர்த்தனர். ஆனால் அதன் பிறகு ரெய்னா (32 ரன்கள்) அவுட் ஆக, குஜராத் அணியின் விக்கெட்கள் மளமளவென்று சரியத் தொடங்கின. 

ஜடேஜா (9 ரன்), டுவைன் ஸ்மித் (4 ரன்) என்று மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களும் அவுட் ஆக குஜராத் அணி தோல்வியை நோக்கி நகரத் தொடங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து தோற்றது. அந்த அணியில் கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக் 58 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இப்போட்டியில் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Trending News