இலங்கை அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 சர்வதேச போட்டியில், விராட் கோலி 11,000 சர்வதேச ரன்களை விரைவாக எட்டிய கேப்டன் என்ற பெருமையினை பெற்றார்!
இலங்கை அணிக்கு எதிராக நடைப்பெற்று வரும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டி20 வெள்ளியன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த போட்டியில் கோலி 26 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
இப்போட்டியில் அவர் தனது 1-வது ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக, மிக விரைவில் 11,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் இச்சாதனையினை படைத்த ஆறாவது சர்வதேச கேப்டனாகவும், மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இந்தியராகவும் அடையாளம் காணப்பட்டார்.
முன்னதாக, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கோலி தனது 22-வது ரன்னை எட்டிய போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
MS தோனிக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையினையும் அவர் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேப்போல், ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்தியாவின் உறுதியான வெற்றியின் போது, டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரராக கோலி, இந்திய அணியின் துணை தலைவர் ரோஹித் ஷர்மாவின் சாதனையினையும் முறியடித்தார்.
தற்போது 72 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கோலி 2689 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ரோஹித் ஷர்மா 96 இன்னிங்ஸ் விளையாடி 2633 ரன்கள் குவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் 80 இன்னிங்ஸ்களில் 2436 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.