பயமுறுத்திய வெல்லலகே... கிளோஸ் செய்தார் குல்தீப் - இறுதிப்போட்டியில் இந்தியா!

IND vs SL: ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 12, 2023, 11:57 PM IST
  • குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • வெல்லலகே 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • அவர் பந்துவீச்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பயமுறுத்திய வெல்லலகே... கிளோஸ் செய்தார் குல்தீப் - இறுதிப்போட்டியில் இந்தியா! title=

IND vs SL: ஆசிய கோப்பை தொடர் கடந்த ஆக. 30ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டிலும் இத்தொடர் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில், இலங்கையின் கொழும்புவில் மீதம் உள்ள போட்டிகள் நடைபெற இருக்கின்றன. குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தற்போது, சூப்பர் 4 சுற்று தனது உச்சத்தை எட்டிவிட்டது. 

அந்த வகையில், சூப்பர் 4 சுற்றில் முக்கிய போட்டிகளில் ஒன்றான இந்தியா - இலங்கை போட்டி கொழும்பு பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. போட்டியின் டாஸை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 213 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 54, கேஎல் ராகுல் 39, இஷான் கிஷன் 33 ரன்களை எடுத்தனர்.  

இலங்கை அணியின் பந்துவீச்சு தரப்பில் வெல்லலகே 5, அசலங்கா 4, தீக்ஷனா 1 விக்கெட்டுகளை இழந்தனர். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்துவீச்சாளர்களிடம் பறிகொடுத்து ஆல்-அவுட்டானது ஒருநாள் அரங்கில் இதுவே முதல்முறையாகும். அந்த அளவிற்கு ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு கைக்கொடுத்தது. 

தொடர்ந்து, 214 ரன்களை துரத்திய இலங்கை அணிக்கு பும்ரா கடும் நெருக்கடியை கொடுத்து முதல் விக்கெட்டை எடுத்தார். நிசங்கா 6 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 15 ரன்களிலும் பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல், சிராஜ் பந்துவீச்சில் திமுத் கருணரத்னே 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டை எடுத்து தடுமாறியது. 

மேலும் படிக்க | IND vs SL: இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களை தட்டி தூக்கிய துனித் வெல்லலகே

முன்னரே சொன்னதுபோல், 11ஆவது ஓவருக்கு பின் குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் இலங்கை அணி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்க பந்துவீச வந்தனர். இருப்பினும், சதீரா - அசலங்கா ஜோடி அவர்களை நிதானமாக எதிர்கொண்டு விக்கெட்டை பாதுகாத்து ரன்களை எடுத்தது. இந்த ஜோடி 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் வைத்தபோது, சதீரா 17 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். சற்று நேரத்திலேயே அசலங்காவுடன் 22 ரன்களில் நடையை கட்ட டி சில்வா மற்றும் கேப்டன் ஷனகா ஜோடி சேர்ந்தனர். 

இந்த ஜோடி 5 ஓவர்கள் வரை தாக்குபிடித்து நிதானம் காட்டி வந்த நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் ஷனகா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை கேப்டன் ஷனகா கேட்சை ஸ்லிப்பில் நின்ற ரோஹித் கச்சிதமாக பிடித்து அசத்தினார். இலங்கை அணி 6 விக்கெட்டுகைளை இழந்தாலும், இதன்பின் தான் இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியே ஆரம்பித்தது எனலாம். 

களத்திற்கு வந்த வெல்லலகே, டி சில்வா உடன் அற்புதமான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். இருவரும் சிங்கிள்ஸ், டபுள்ஸ், பவுண்டரிகள் என ரன்களை வரவைத்துக்கொண்டே இருந்தனர். அதுவரை இலங்கையை அச்சுறுத்திய குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெல்லலகே அடித்த சிக்ஸர் பார்வையாளர்களை பரவச நிலைக்கே கொண்டு சென்றது எனலாம்.

மேலும் படிக்க | IND vs SL: ஒரே சிக்ஸரில் ரோஹித் இரண்டு சாதனை... ஆனால் போட்டியில் இலங்கையின் ஆதிக்கம்!

அந்த அளவிற்கு இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தினர். இருவரும் இணைந்து 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டி சில்வா 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெல்லலகே நல்ல முறையில் ஆடி வந்ததால் அப்போது கூட இந்திய அணிக்கு நெருக்கடி இருந்தது. இன்னும் 3 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுமார் 12 ஓவர்கள் மீதம் இருக்க 51 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இலங்கை பொறுமையாக விளையாடினால், வென்றுவிடும் என்று தான் அனைவரும நினைத்தனர். 

ஆனால், பாண்டியா வீசிய 41ஆவது ஓவரில் தீக்ஷனா கொடுத்த கேட்சை சூர்யகுமார் யாதவ் அற்புதமாக பிடித்து இலங்கையின் கனவை உடைத்தார். அப்போது ராஜிதா களத்தில் நிற்கு அடுத்த ஓவர் குல்தீப் யாதவ்விடம் கொடுக்கப்பட்டது. அவர் 42ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ராஜிதாவை ஆட்டமிழக்கச் செய்தார். அதே ஓவரில் மூன்றாவது பந்தில் பதிரானாவின் விக்கெட்டை எடுத்து இன்றும் குல்தீப் யாதவே ஆட்டத்தை முடித்து வைத்தார். 

இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. வெல்லலகே 42 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் குல்தீப் 4, ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2, சிராஜ் மற்றும் ஹர்திக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். மேலும், பேட்டிங்கில் 42 ரன்களை எடுத்தது மட்டுமின்றி பந்துவீச்சில் ரோஹித், கில், விராட், கேஎல் ராகுல், ஹர்திக் என இந்திய டாப் ஆர்டரையே ஆட்டம் காண வைத்த வெல்லலகே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது, இதனால் வங்கதேசம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நாளை மறுதினம் (செப். 14) நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுபவர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள். செப். 15ஆம் தேதி இந்திய அணி, வங்கதேச அணியுடன் இதே மைதானத்தில் மோத உள்ளது. செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளது. 

மேலும் படிக்க | ஹிந்துவாக இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News