IND v WI: வெ.இண்டீஸ் அணியை துவைத்து காயப்போட்ட இந்திய அணி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 7, 2019, 06:21 AM IST
IND v WI: வெ.இண்டீஸ் அணியை துவைத்து காயப்போட்ட இந்திய அணி title=

ஹைதராபாத்: நேற்று நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு ஹைதராபாத்தில் (Hyderabad T20) உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் போட்டி தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. 

நான்கு மாதங்களுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதால், ரசிகர்களின் ஆரவாரம் இடையே ஆட்டம் ஆரம்பமானது. துவக்க வீரர்களான சிம்மன்ஸ் 2 ரன்னுக்கு ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீரர் எவின் லூயிஸ் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்தார். அதன் பிறகு வந்த ஷிம்ரான் ஹெட்மியர் பந்தை பறக்க விட்டார். பிரண்டன் கிங் 31(23) ரன்னுக்கும், ஹெட்மயர் 56(41) ரன்னுக்கும் அவுட் ஆனர்கள். அணியின் கேப்டன் பொல்லார்ட் 37(19) ரன்கள் விளாசி அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. களத்தில் ஹோல்டர்* 24(9) மற்றும் தேனேஷ் ராம்தின்* 11(7) அவுட் ஆகாமல் இருந்தனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் (Shimron Hetmyer) 56(41) ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணி வெற்றி பெற 208 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட ஆரம்பித்தது.

மிகவும் எதிர்பார்த்த தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் அணியின் கேப்டன் விராட் கோலி. இருவரும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சும்மா நான்கு பக்கமும் பறக்க விட்டார்கள். 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட கே.எல். ராகுல் 40 பந்துகளில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக விளாசி தள்ளினார். ரிஷப் பண்ட் 18 ரன்களுக்கு அவுட் ஆனதும், ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். ஆனால் அவர் 4(6) ரன்னில்அவுட் ஆனார். ஆனால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் கேப்டன் விராத் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். அவர் 6 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடித்தார்.

கடைசியில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்தட போட்டி டிசம்பர் 8 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News