இந்தியாவின் முதல் தோல்வி இவரால் வரலாம்...! என்ன செய்யப்போகிறார் ரோஹித் சர்மா?

ICC World Cup 2023: தோல்வியே இல்லாமல் தற்போது முதலிடத்தில் இருந்தாலும், இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்க அணியும், குறிப்பாக அதன் முக்கிய வீரர் ஒருவரும்தான் பெரிய பிரச்னை என வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 25, 2023, 12:35 PM IST
  • இந்திய அணி இப்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
  • தென்னாப்பிரிக்கா அணி இப்போது 8 புள்ளிகளுடன் இரண்டாமிடம் இடத்தில் உள்ளது.
  • இந்த இரு அணிகளுக்குமான போட்டி நவ. 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்தியாவின் முதல் தோல்வி இவரால் வரலாம்...! என்ன செய்யப்போகிறார் ரோஹித் சர்மா? title=

ICC World Cup 2023: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் தற்போது அனைத்து அணிகளும் பாதி கிணறை தாண்டிவிட்டன எனலாம். அதாவது, குறைந்தபட்சம் நான்கு போட்டிகளில் அனைத்து அணிகளும் விளையாடிவிட்ட நிலையிலும், எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பது இன்னும் முழுமையாக கூற முடியவில்லை.

அரையிறுதியில் யார் யார்?

இந்தியா (Team India), தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள்தான் தொடரின் தொடக்கத்தில் இருந்தே அரையிறுதிக்கு செல்ல தகுதியுடைய அணிகள் என வல்லுநர்கள் கருத்து கூறி வந்தனர். இந்த 6இல் நான்கு அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்பது பொது பார்வையில் தெரிந்தாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்தின் அதிர்ச்சி வெற்றிகள் அந்த பார்வையை மாற்றியுள்ளது எனலாம். 

இங்கிலாந்து அணி, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா என மூன்று தோல்விகளை சந்தித்துவிட்டது. பாகிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தோல்வியடைந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியோ தனது முதல் இரு போட்டிகளில் முறையே இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்துவிட்டது.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா வரமாட்டாரா...? அப்போ இன்னும் இந்த வீரருக்கு வாய்ப்பிருக்கு! - இந்த முறை மிஸ் ஆகாது!

வலுவான நிலையில் இந்தியா

புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ள நியூசிலாந்து அணி இந்தியாவுடனும், தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்திடமும் தோல்வியடைந்துள்ளது. இதனால், ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி மட்டும் தோல்வியடையாமல் இருந்தாலும், அந்த அணிக்கு இன்னும் இரண்டு பெரிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை இந்தியா இன்னும் எதிர்கொள்ள உள்ளனர். 

முரட்டு ஃபார்மில் தென்னாப்பிரிக்கா

இந்தியா - இங்கிலாந்து (IND vs ENG) போட்டி ஒருபுறம் இருந்தாலும், இந்தியா - தென்னாப்பிரிக்கா (IND vs SA) போட்டிதான் பெரும்பாலானோரால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக தற்போது உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்த தொடரில் 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் முதலில் பேட் செய்து 300+ ரன்களை அடித்துள்ளது. அதிலும் இலங்கை அணிக்கு எதிராக 428 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 311 ரன்கள், இங்கிலாந்து அணிக்கு எதிராக 399 ரன்கள், வங்கதேச அணிக்கு எதிராக 382 ரன்கள் என இந்த உலகக் கோப்பை அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா வைத்துள்ளது. 

எகிறும் எதிர்பார்ப்பு

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி இரண்டாவது பேட்டிங் செய்தது. அதில் 246 ரன்கள் இலக்காக இருந்த நிலையில், 207 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தது. அந்த ஒரே ஒரு போட்டி அன்றைய தினம் நெதர்லாந்து வீரர்கள் காட்டிய தீவிரத்தால் விளைந்தது, அதைவிடுத்து பார்த்தோமானால் தென்னாப்பிரிக்கா அசைக்க முடியாத அணியாகும். எனவே, இந்தியா 5 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் வந்தால் கூட, ஏன் ஒருவேளை இங்கிலாந்தையும் வீழ்த்தி 6 வெற்றிகளுடன் போனாலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. 

மேலும், தென்னாப்பிரிக்காவில் (South Africa Cricket Teamm) டி காக், வான் டெர் டசன், மார்க்ரம், கிளாசன் உள்ளிட்டோர் இந்த தொடரில் சதம் அடித்து மிரட்டி உள்ளனர். இதில் டி காக் 3 முறையும், மார்க்ரம் இரண்டு முறையும் சதம் அடித்துள்ளனர். இவை அனைத்தும் முதல் பேட்டிங்கில் வந்தது என்பதை நினைவில் கொள்ளவும். இப்படியிருக்க இந்திய அணி வழக்கம்போல் முதலில் பந்துவீசினால் அது தென்னாப்பிரிக்காவுக்கு தான் சாதகமாக முடியும். இந்திய அணி முதல் 5 போட்டியிலும் சேஸிங் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

கிளாசென் சூறாவளி

இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கிளாசென் (Klassen) சுழற்பந்துவீச்சாளர்களை துச்சம் என நினைத்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிடுகிறார். இந்திய அணி மிடில் ஆர்டரில் சற்று சுணக்கம் காட்டினாலும் அது கிளாசெனின் அதிரடிக்கு வழிவகுக்கலாம். கிளாசென் கடந்த 7 ஓடிஐ போட்டிகளில் 468 ரன்களை குவித்துள்ளார். போட்டி கொல்கத்தா ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் நவ. 5ஆம் தேதி நடைபெறுகிறது. இது பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பது உலகறிந்தது. எனவே, இந்திய அணிக்கு தொல்லை தரும் ஒரே அணி தென்னாப்பிரிக்காவும், அதிலும் குறிப்பாக கிளாசென் அதிக பிரச்னையாக இருப்பார். 

மேலும் படிக்க | இங்கிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியா... வந்தாலும் பெரிய யூஸ் இல்லை? - இதுதான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News