லண்டன்: 2019 உலகக்கோப்பையை வென்ற அதே லார்ட்ஸ் மைதானத்தில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது இங்கிலாந்து அணி.
நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வலுவான அணியாக வலம் வந்த இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், அரையிறுதியில் இந்தியாவை வென்று பைனலுக்கு சென்ற நியூசிலாந்து அணியுடன் மோதி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றது. உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. உலகமே இங்கிலாந்து அணியை பாராட்டியது.
உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி, சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஐயர்லாந்து அணியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட முடிவு செய்தது. வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ளதால், ஐயர்லாந்து அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது
முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. சின்ன அணி தானே ஐயர்லாந்து என்ற நினைப்பில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 42 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழந்தது. அதுவும் முக்கிய வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 23.4 ஓவரில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஐயர்லாந்து அணி சார்பில் டிம் முத்ராக் ஐந்து விக்கெட்டையும், மார்க் ஆடிர் 2 விக்கெட்டும், பாய்ட் ராங்கின் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
2019 உலகக்கோப்பையை வென்ற ஒரு அணி, அதிகம் அனுபம் இல்லாத புதிய அணியான ஐயர்லாந்து பந்து வீச்சை தாக்கு பிடிக்காமல் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.