SRH vs RR Match Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து, பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதில் குவாலிஃபயர் 1 போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது.
அந்த வகையில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற நாளைய குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முட்டிமோதும் என்பதால் நாளைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் எனலாம். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் நாளை போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அசூரத்தனமான பேட்டிங் ஆர்டரை வைத்துள்ள ஹைதராபாத் அணியை, அனுபவம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சமாளிக்கும் என ரசிகர்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.இந்நிலையில், வெற்றி பெற இரு அணிகளும் சென்னை சேப்பாக்கத்தில் வியூகத்தை எப்படி அமைக்க வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்: வியூகங்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்தது. இருப்பினும், அந்த அணி கடைசி கட்டத்தில் கடுமையாக சொதப்பியது. இருப்பினும் அந்த அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றியை பெற்று தந்தது எனலாம். குறிப்பாக, பவர்பிளேவில் போல்ட் அவரது அனுபவத்தை காட்டினார் என்றால், மிடில் ஓவர்களில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். போல்ட் அவரின் முதல் மூன்று ஓவர்களில் 6 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார், மொத்தமாகவே 4 ஓவர்களுக்கு 16 ரன்களைதான் அவர் கொடுத்தார். அதேபோல், அஸ்வின் அவரின் நான்கு ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொடுத்தார்.
இவர்களின் இந்த 8 ஓவர்கள்தான் ஆர்சிபி அணியை 172 ரன்களுக்கு சுருட்டியது எனலாம். ஆவேஷ் கானின் கடைசி 2 ஓவர்களும் குறிப்பிடத்தகுந்ததுதான். பேட்டிங்கில் கடந்த சில போட்டிகளாகவே சொதப்பி வந்த ராஜஸ்தானுக்கு நேற்றைய போட்டியில் சில ஆறுதல் கிடைத்தது எனலாம். ஜெய்ஸ்வாலின் நல்ல தொடக்கம், ரியான் பராக்கின் நிலையான ஆட்டம், ஹெட்மயர் மற்றும் ரோவ்மேன் பாவெலின் ஃபினிஷிங் ஆகியவை ராஜஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் ஹெட், அபிஷேக் சர்மா என இரண்டு பேரையும் போல்டின் ஸ்விங்கும், அஸ்வினின் சுழலும் பார்த்துக்கொள்ளும் எனலாம். சென்னை சேப்பாக்கத்தில் சுழலும், ஸ்விங்கும் கிடைக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்கும் இந்த ஆடுகளம் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
இதுதான் பெரிய கேள்வி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி, கிளாசென் ஆகியோரை ஆவேஷ் கான் மற்றும் சஹால் பார்த்துக்கொள்வார்கள் எனலாம்.ராஜஸ்தானின் பேட்டிங்கில் கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாதது சற்று பின்னடைவு எனலாம்.எனவே, ஹைதராபாத்தின் அதிரடி ஆட்டத்தை நுணுக்கமான அனுபவம் கொண்டு தாக்க ராஜஸ்தான் தயாராக வேண்டும். புவனேஷ்வர் குமார், நடராஜன், கம்மின்ஸ், நிதிஷ் ரெட்டி ஆகியோரின் வேகப்பந்துவீச்சை ராஜஸ்தான் பேட்டர்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதே பெரிய கேள்வி. ஹைதராபாத் அணியில் பெரிதாக சுழற்பந்துவீச்சு இல்லாதது சற்று பின்னடைவுதான்.
ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் வழக்கமான அதிரடி மோடில் விளையாடவே பார்க்க வேண்டும். சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் என்றாலும் பந்து நன்றாக நின்று வரும்போது சற்று கணித்தே விளையாடியாக வேண்டும். மிடில் ஆர்டரில் நிதிஷ் ரெட்டி, திரிபாதி, கிளாசென் ஆகியோர் அந்த அதிரடி தொடரும்பட்சத்தில் கூடுதல் பேட்டராக சன்வீர் சிங்கை எடுக்கத் தேவை இருக்காது. அதனால், இம்பாக்ட் பிளேயராக கூடுதல் ஸ்பின்னராக மயங்க் மார்க்கண்டேவை அந்த அணி முயற்சிக்கலாம். சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் ஸ்பின்னர்களை நன்றாக விளையாடுவார்கள் என்றாலும் சென்னை ஆடுகளம் சற்று அவர்களை தொந்தரவு செய்யலாம்.
கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளுமே சென்னை சேப்பாக்கத்தில் இந்தாண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய லீக் போட்டிகளில் தோல்வியை தழுவின. இருப்பினும், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தரமான ஸ்பின்னர்கள் இருப்பது கூடுதல் சாதகம். இந்த இடத்தில்தான் சன்ரைசர்ஸ் சறுக்குகிறது எனலாம்.
மேலும் படிக்க |ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி செய்துள்ள சாதனை! முறையடிப்பது சிரமம் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ