Team India, Captaincy Debate: இந்திய அணி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் தொடர் என்றால் அதே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்தான். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 1996-97ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி ஆண்டுதோறும் நடைபெறும். இதுவரை 16 தொடர்கள் நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி (Team Australia) இதுவரை 5 முறை தொடரை வென்றுள்ளது. இந்திய அணி (Team India) 10 முறை தொடரை வென்றுள்ளது. 2003-04ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடரில் 1-1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தாலும் அதற்கு முந்தைய ஆண்டு தொடரை கைப்பற்றியது இந்தியா என்பதால் அந்தாண்டும் இந்தியாவே கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. அதேபோல், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. அதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018-19, 2020-21 ஆகிய தொடர்களையும் இந்தியாவே வென்றிருக்கிறது. தொடர்ச்சியாக நான்கு முறை இந்தியா பார்ட்ர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்திருக்கிறது. அதில் ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து இரண்டு முறை வென்றுள்ளது.
கோப்பை தக்கவைக்குமா இந்திய அணி?
அந்த வகையில், இந்தாண்டு 2024-25 பார்டர் கவாஸ்கர் கோப்பை (Border-Gavaskar Trophy 2024-25) 5 போட்டிகளை கொண்ட தொடராக நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த நாட்டிலேயே வைத்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வீழ்த்த, ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி தற்போது இருந்தே ஆயத்தமாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018-19 பார்ட்ர் கவாஸ்கர் தலைமையிலான தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து, 2020-21 தொடரில் விராட் கோலி முதல் போட்டிக்கு பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலக, அஜிங்கயா ரஹானே கேப்டனாக செயல்பட்டார். இந்தியா அடுத்து மூன்று போட்டிகளில் இரண்டை வென்றும், ஒரு போட்டியை டிரா செய்தும் தொடரை மீண்டும் 2-1 என்ற கணக்கில் தக்கவைத்தது.
இம்முறை பேட்டிங்கில் புஜாரா, ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் வீரர்கள் இல்லை. கேஎல் ராகுல், சுப்மான் கில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு பழக்கப்பட்டவர்கள்தான் என்றாலும் கூட அவர் மிடில் ஆர்டரில் இம்முறை சோபிப்பார்களா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. உள்ளூர் தொடர்களில் அதிரடி காட்டும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய தொடரில் எப்படி செயல்படுவார் என்பதை பார்க்கவும் பலரும் ஆர்வமுடன் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா என அனுபவ வீரர்கள் பலர் இருந்தாலும் ஷமியும் அட்டாக்கில் இணைந்தால் இந்திய அணிக்கும் பலம் கூடும். அக்சர் பட்டேல், சிராஜ் ஆகியோர் கடந்த 2020-21 சீரிஸில் ஆஸ்திரேலியாவில் அனுபவம் பெற்றவர்கள் ஆவர். ஆகாஷ் தீப், சர்ஃபராஸ் கான் போன்றவர்களும் அங்கு சிறப்பான பங்களிப்பை வழங்க காத்திருக்கின்றனர்.
ரோஹித் விளையாட மாட்டாரா?
பெரும்பாலும் விராட் கோலி (Virat Kohli), ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் இதுதான் கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடராக இருக்கக்கூடும். எனவே, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த தொடரை எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று நேற்று வெளியானது. அதாவது, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்பதில் சந்தேகம் என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் முதல் போட்டியிலோ அல்லது முதலிரண்டு போட்டிகளையோ விளையாட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மீண்டும் கேப்டன் ஆவாரா பும்ரா?
ஒருவேளை இது உண்மையாகும்பட்சத்தில், ரோஹித் சர்மாவுக்கு பதில் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ராவே (Jasprit Bumrah) இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். எனவே, அவர்தான் ஆஸ்திரேலியாவிலும் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாட் கம்மின்ஸை போல் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கேப்டனாக நியமிப்பது இந்திய அணிக்கு சிறப்புதான். அதுவும் போட்டி குறித்த பும்ராவின் சிந்தனை என்பது தன்னிகரற்றது. எனவே அவரை கேப்டனாக நியமிப்பதே சிறப்பான தேர்வாக இருக்கும்.
கேப்டன்ஸியில் அஸ்வின்...?
இந்த கேப்டன்ஸி ரேஸில் பும்ரா உடன் அனுபவ வீரர் கேஎல் ராகுலும் (KL Rahul) உள்ளார். மேலும் அடுத்த இளம் கேப்டன்கள் லிஸ்டில் ரிஷப் பண்டும் (Rishabh Pant), சுப்மான் கில்லும் (Shubman Gill) இருக்கின்றனர். இல்லை நிச்சயம் அனுபவ வீரர்கள் வேண்டும் எனும்பட்சத்தில் பும்ரா, கேஎல் ராகுல் தவிரை நிச்சயம் அஸ்வினையும் (Ravichandran Ashwin) கேப்டனாக நியமிக்கலாம். தற்போதைய இந்திய அணியில் ஆட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்த ஒரு அனுபவ வீரர் என்றால் அதில் அஸ்வின் முதன்மையான இடத்தை பிடிப்பார். அவருக்கு பின்னரே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் வருவார்கள் எனலாம். கேப்டனை தேர்வுசெய்வதில் கம்பீரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அவர் யாரை தேர்வு செய்கிறார் என்பதும் உற்றுநோக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ