SRH vs CSK Match Highlights: 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தற்போது குறைந்தபட்சம் 3 போட்டிகள் விளையாடிவிட்ட நிலையில் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது என்றாலும் இன்றைய லீக் போட்டி சற்று கூடுதல் முக்கியத்துவம் பெற்றது எனலாம்.
கடந்த சில நாள்களுக்கு முன் 5 முறை கோப்பையை வென்று, தற்போது பலமுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அந்த போட்டி நடந்த மைதானத்தில் அதாவது ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில்தான் இன்றைய லீக் போட்டியும் நடைபெற்றது, இருப்பினும், ஆடுகளம் மும்பை - ஹைதராபாத் போட்டி போன்று இல்லை.
சிஎஸ்கே சுமார் பேட்டிங்
நடப்பு ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக தூபே 45 ரன்களையும், ரஹானே 35 ரன்களையும் சேர்த்தனர். எஸ்ஆர்ஹெச் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ், நடராஜன், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மேலும் படிக்க | தோனி வந்தும் எந்த பயனும் இல்லை... சிஎஸ்கே பேட்டர்கள் தடுமாறியதற்கு என்ன காரணம்?
கேட்சைவிட்ட மொயின் அலி
தொடர்ந்து 166 ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஓப்பனிங்கில் களமிறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் பந்திலேயே ஹெட் ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க, அந்த வாய்ப்பை மொயின் அலி கோட்டைவிட்டார். மொயின் அலி அந்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டமே தலைகீழாக மாறியிருக்கும். டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடாவிட்டாலும், மறுபுறம் அபிஷேக் சர்மா எவ்வித பயமும் இன்றி வெறித்தனமாக விளையாடினார்.
கிழித்தெடுத்த அபிஷேக் சர்மா
குறிப்பாக, 2ஆவது ஓவரை இம்பாக்ட் பிளேயராக வந்த முகேஷ் சர்மா வீச அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 4,0,6,0,6Nb,6,4 என 27 ரன்களை குவித்தார். ஒருவேளை முதல் ஓவரில் ஹெட் ஆட்டமிழந்திருந்தால் அழுத்தம் அபிஷேக் மீது இருந்திருக்கும், அவர் அடித்திருக்கும் வாய்ப்பும் சற்று குறைந்திருக்கலாம். அடுத்த ஓவரிலும் அபிஷேக் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து தீபக் சஹாரிடம் வீழ்ந்தார். அவர் 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 37 ரன்களை எடுத்திருந்தார்.
பவர்பிளேவிலேயே மிரட்டல் அடி
அவர் ஆட்டமிழந்த பின் எய்டன் மார்க்ரமும், ஹெட்டும் தொடர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர். இதனால் பவர்பிளே முடிவில் ஹைதராபாத் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்களை எடுத்துவிட்டது. அதாவது, அப்போது அந்த அணியின் வெற்றி பெற 84 பந்துகளில் 88 ரன்களே தேவைப்பட்டது, அதுவும் 9 விக்கெட்டுகள் கையிருப்பில் இருந்தது. பவர்பிளேவிலேயே ஹைதராபாத் முக்கால்வாசி பெற்றியை பெற்றுவிட்டது.
போராடிய சிஎஸ்கே ஸ்பின்னர்கள்...
இருப்பினும், சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் முடிந்த வரையில் போராடினர். ஜடேஜா, தீக்ஷனா, மொயின் அலி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சேர்ந்து 12 ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசி 83 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் தீக்ஷனா பவர்பிளேவில் ஒரு ஓவரும் வீசியது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஹைதராபாத் அதன் இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சுக்கு 4 ஓவர்களையே கொடுத்தது.
கிளாசென் சிக்ஸரே அடிக்கவில்லை...
ஹெட் 31 ரன்களுக்கும், மார்க்ரம் 50 ரன்களுக்கும், ஷாபாஸ் 18 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஹைதராபாத் அணிக்கு ஆட்டத்தை முடித்துவைத்தனர். ஹைதராபாத் அணி 11 பந்துகள் மிச்சமிருக்க இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எப்படி சிஎஸ்கே அணிக்கு தோனி இன்று சிக்ஸர் அடிக்கவில்லையோ அதேபோல், ஹைதராபாத் அணிக்கு கிளாசெனும் இன்று சிக்ஸர் அடிக்கவில்லை. மொயின் அலி 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, தீபக் சஹார் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சிஎஸ்கே தரப்பில் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.
Nitish Reddy seals the win for @SunRisers with a MAXIMUM#SRH chase down the target with 11 balls to spare and get back to winning ways
Scorecard https://t.co/O4Q3bQNgUP#TATAIPL | #SRHvCSK pic.twitter.com/lz3ffN5Bch
— IndianPremierLeague (@IPL) April 5, 2024
புள்ளிப்பட்டியல் நிலவரம்
புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 3ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணியும் 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன. குறிப்பாக, இந்த இரண்டு அணிகளும் தங்களின் ஹோம் மைதானத்தில்தான் வெற்றியை பதிவு செய்துள்ளன. அவே போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ