தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் வரும் இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இருஅணிகளும் சமநிலையில் இருப்பதால், நாளைய போட்டியில் வெற்றி பெரும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும். இதனால் இரு அணிகளும் கடைசி ஒருநாள் போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது.
நாளை நடைபெறும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியாவின் வெற்றி சதவீதம் எவ்வளவு? இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவில் நிலை என்ன என்று பார்ப்போம்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 10வது ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதுவரை ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா ஐந்து முறையும், இந்தியா நான்கு முறையும் தொடர்களை வென்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும், இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றால், இரு அணிகளும் 5-5 என்று சமமாக இருக்கும்.
1984-85ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் தொடர் போட்டி தொடங்கியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் தொடர் இந்தியாவில் விளையாடப்பட்டன.
> மெல்போர்னில் 123 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடி உள்ளது. அதில் 74 போட்டிகளில் வெற்றியும், 45 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு போட்டி "டை" ஆனது. மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
> மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பொருத்த வரை இந்திய அணி 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 10 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.
> மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, சிகர் தவன் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் சதம் அடித்துள்ளனர். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் ஏழு முறை சதம் அடித்துள்ளனர். அதேபோல ரோஹித் சர்மா இரண்டு முறை சதம் அடித்துள்ளனர்.
> மெல்போர்னில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முன்னால் கேப்டன் கபில் தேவ் 17 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
> இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 130 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இந்தியா 46 போட்டியிலும், ஆஸ்திரேலியா 74 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிக்கான முடிவு இல்லை.
> இதுவரை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றால், முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி என்ற வரலாறு சாதனையை படைக்கும்.