போலியான செய்திகள் பரவுவதை தடுக்க டிவி விளம்பரம் மூலம் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டது வாட்ஸ் ஆப்!
வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியாவில் முதன்மையான சேவை நிறுவனமாக இருக்கின்றது. மேலும் வர்த்தக ரீதியிலும் செயல்பட்டு வருகின்றது. பொது மக்களுக்காக பல்வேறு வசதிகளையும் வழங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி சமீபகாலமாக வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அடுத்தகட்ட முயற்சியாக, தொலைக்காட்சி விழிப்புணர்வு பிரசாரத்தை அந்த நிறுவனம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியுள்ளது.
தகவல் பரிமாற்றத்தில் இன்று வாட்ஸ் ஆப் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் இதன் மூலம் பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பது இந்நிறுவனத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
பொய் செய்திகள் குறித்து பயன்பாட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அகில இந்திய வானொலி சேவையின் வாயிலாக விழிப்புணர்வு விளம்பரங்கள் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்தகட்டமாக, தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும், அகில இந்திய வானொலியில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் இந்த விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வதந்தி பரப்பப்படுவதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக தொலைக்காட்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை வாட்ஸ் ஆப் தொடங்கியுள்ளது. இதற்காக தலா 60 வினாடிகள் ஓடக் கூடிய 3 வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியை பகிருங்கள், வதந்திகளை அல்ல என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோக்களில், வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் வதந்திகளால் என்னென்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதும் கதாப்பாத்திரங்கள் வாயிலாக விளக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளில் மட்டும் அல்லாது பேஸ்புக், யூடியூப் தளங்களிலும் இந்த வீடியோக்களானது ஒன்பது மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.