தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில், தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 1951-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார் நடிகர் செந்தில். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும்.
ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12-ம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார் நடிகர் செந்தில். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது.
சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983-ம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவரை இன்முகத்துடன் வரவேற்க்கப்பட்டார். 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். இருவரையும் திரையில் ஒன்றாக பார்த்தாலே சிரிப்பு தானாக வந்துவிடும். பதினைந்து வருடங்கள் இரண்டு பேரும் தமிழ் சினிமாவின் காமெடி உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.