தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனு தாக்கல் செய்துள்ளார்!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலை எதிர்கொள்கின்றன. இதற்காக 2 அணியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு, புதுக்கோட்டையில் முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களிடம் வாக்கு கோரும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த நாசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்., தேர்தலுக்கு முன்பு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் சொன்ன எல்லாவற்றையும், ஒன்றைத் தவிர, செய்துவிட்டோம்.
வெறும் காலி இடமாக இருந்த இடத்தில் இன்று கட்டிடம் இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். தேர்தலுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு அளிக்க கோருவோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஜூன் 23-ஆம் தேதி அன்று MGR ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரச்னை ஏற்படாமலிருக்க MGR ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் காவல்துறை கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் விஷால். MGR ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் விஷால் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷால் அளித்துள்ள இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.