முன்னதாக நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேறு ஒருவர் போட்ட பதிவை தாம் தவறாக பகிர்ந்து விட்டதாகவும், அதற்காக அனைத்து பெண் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து அவர் மீது தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் அளித்த புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரனைக்கு வந்தது. விசாரணையில் பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து, அவரின் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதால் எஸ்.வி.சேகர் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.