ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கொடி தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வருகிற தமிழ் புத்தாண்டு அன்று அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகரும், வருங்கால அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், வருகிற தமிழ் புத்தாண்டு அன்று ரஜினிகாந்த் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார். இதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக அதற்கு நிர்வாகிகள் நியமித்து வருகிறார்.
இதற்கிடையே பொது வெளியில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் ரஜினி.
முன்னதகா வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அதேப்போல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்க இருக்கிறார். திரைப்பணிகளிலும், அரசியல் என இரண்டிலும் தொடர்ந்து ரஜினி கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்கு பிறகு, இமயமலை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கு 15 நாட்களுக்கு மேல் தங்குகிறார்.
இந்நிலையில், இமயமலையில் இருந்து திரும்பியதும் ரஜினிகாந்த், அரசியல் பணிகளில் வேகம் காட்ட இருக்கிறார். அதன் முதல் அடித்தளம் தான் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்வது. அந்தவகையில், ஏற்கனவே ரஜினிகாந்தின் கட்சிக்கு கொடி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், கட்சியின் பெயருக்காக 10 பெயர்கள் தேர்வுக்கான பட்டியலில் இருப்பதாகவும், மக்களை கவரும் விதமாகவும், அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை தரும் வகையிலும் பெயர் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. கட்சி கொடி மற்றும் பெயரை நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி அறிமுகம் செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக பிரமாண்ட மாநாடு நடத்தவும், மாநாட்டுக்கான இடத்தை திருச்சியிலோ அல்லது சென்னையிலோ தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.