ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் ஓப்பனிங் இறங்கிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 12 பந்துகளில் 46 ரன்கள் அடுத்து அபிஷேக் அவுட்டாக, ஹெட் 32 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இவர்கள் இருவரின் அதிரடியில் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. அதிவேக அரைசதம், பவர்பிளேவில் அதிகபட்ச ஸ்கோர் (6 ஓவர்களில் 125 ரன்கள்) என பல சாதனைகளை அந்த அணி படைத்தது.
அதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிதீஷ்ரெட்டி அதிரடியாக ஆடி 37 ரன்களும், ஷபாஸ் அகமது 29 பந்துகளில் 59 ரன்களும் விளாசினர். இந்த இன்னிங்ஸில் மட்டும் மொத்தம் 22 சிக்சர்களை விளாசியது சன்ரைசர்ஸ் அணி.
அடுத்து சேஸிங் இறங்கிய டெல்லி அணியும் பதிலடி கொடுத்தது. முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து அவுட்டானார் பிரித்திவி ஷா. வார்னர் 1 ரன்னுக்கு அவுட்டாக, மெக்குர்க் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 18 பந்துகளில் 65 ரன்கள் விளாச, அபிஷேக் போரல் 42 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களம் புகுந்தவர்களில் ரிஷப் பன்ட் மட்டும் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுக்க மற்றவர்கள் யாரும் சோபிக்கவில்லை. இதனால் டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா அணியும், நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளன.