IND vs ENG 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், சர்ஃபராஸ் கானை நோக்கி அக்கறையுடன் கேப்டன் ரோஹித் சர்மா சீற்றமாக கூறிய கருத்துகளை இதில் காணலாம்.
Rohit Sharma, IND vs ENG 4th Test: சர்ஃபராஸ் கான், இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அறிமுகமானார். கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து மிரட்டிய சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சோபிக்கவில்லை.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய (பிப். 25) மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் 40 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியால் 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 10 விக்கெட்டுகளை கையில் வைத்திருக்கும் இந்திய அணி 152 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது. இன்னும் முழுமையாக இரண்டு நாள்கள் உள்ளன.
இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில், 145 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. கிராலி அதிகபட்சமாக 60 ரன்களை அடித்த நிலையில், அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் பேட்டர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். 9ஆவது விக்கெட்டுக்கு நீண்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. சுமார் 14 ஓவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 12 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர். அந்த வகையில், அந்த இன்னிங்ஸின் 47ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் பந்துவீசினார். பஷீருக்கு சிங்கிள் கொடுத்து ஃபோக்ஸ் ஓவர்களை ஓட்டி வந்தார்.
இதனை தடுக்க, 47ஆவது ஓவரின் நான்காவது பந்தில் லாங் ஆன் திசையில் நின்ற சர்ஃபராஸ் கானை, பேட்டருக்கு அருகே பீல்ட் செய்ய ரோஹித் சர்மா அழைத்தார். ரோஹித்தின் அழைப்பை ஏற்ற சர்ஃபராஸ் கான் ஹெல்மட் போடாமல் கிளோஸில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார்.
இதுகுறித்து சர்ஃபராஸ் கானிடம் ரோஹித் சர்மா கேள்வி கேட்க, அதற்கு அவர் ஹெல்மட் கொண்டு வர நேரமாகிவிடும் என்று சமாளிக்க ரோஹித் சர்மா உடனே, "ஏய்... ஹீரோ ஆக முயற்சிக்காதே" என அவர் ஸ்டைலில் சொல்லி ஹெல்மட்டை கொண்டு வர சொன்னார். அப்போது குறுக்கிட்ட நடுவர் தர்மசேனாவும் ஹெல்மட் போட்டுதான் பீல்டிங் செய்ய வேண்டும் என கூறினார். அதன்பின், சர்ஃபராஸ் ஹெல்மட் போட்ட பின்னர் பீல்ட் செய்தார்.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னணியில் உள்ள நிலையில், இந்த போட்டியை வெல்லும்பட்சத்தில் தொடரையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.