ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கடன் வாங்க வேண்டய நிலை ஏற்படுகிறது. எனினும், பல சமயங்களில் நாம் வாங்கும் கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக கடன் வாங்குகி பின் அவதிப்படுகிறோம். தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விவஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பல முறை வங்கி நிதி நிறுவனங்கள் உங்களுக்கு பூஜ்ஜிய சதவீத EMI திட்டத்தை வழங்குகின்றன. ஆனால் அவற்றை எடுப்பதற்கு முன், நீங்கள் அது பற்றிய முழுமையான தகவலைப் பெற வேண்டும். எடுத்துக்காட்டாக, 6 மாதங்களுக்கு பூஜ்ஜிய சதவீத இஎம்ஐ சலுகையில் நீங்கள் 50 ஆயிரம் ரூபாயைப் பெறுகிறீர்கள் என்றும், அதன் செயலாக்கக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் என்றும் வங்கி உங்களுக்குச் சொன்னால், நீங்கள் சுமார் 14 சதவீத வட்டியைச் செலுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த விதத்தில் கடனுக்கான கட்டணத்தைச் செலுத்துவது உங்களுக்கு ஒத்துப்போகும் என்றால் நீங்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம்.
பல வங்கிகள், NBFC-கள், செயலிகள் என பல அமைப்புகள் உங்களுக்கு கடன்களை வழங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உங்களுக்கு விலையுயர்ந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. மேலும் உங்களுக்குத் தெரியாத பல கட்டணங்களையும் விதிக்கிறார்கள். இதன் விளைவாக, நீங்கள் மிக விலையுயர்ந்த கடனை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள். ஆகையால், கடன் வாங்கும் போது யாரிடம் கடன் வாங்குகிறோம் என்பதை மிகவும் கவனமாக முடிவு செய்ய வேண்டும். கடன் வழங்கும் அமைப்பின் முழு செயல்முறைகள் மற்றும் விதிமுறைகளையும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வீட்டுக் கடன்களுக்கு வங்கிகள் ஃபோர்குளோசர் கட்டணம் வசூலிக்க முடியாது. இருப்பினும், மற்ற வகை கடன்களில், நீங்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பல சமயங்களில் கடன் வாங்குவதற்கு முன் இதைப் பற்றித் தெரியாமல், பின்னர் கடன் விலை உயர்ந்ததாக உணர்ந்து, அதை ஃபோர்குளோசர் மூலம் முன்கூட்டியே முடிக்க நினைக்கும் போது, இதற்கு பெரிய தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது தெரிய வருகிறது. சில சமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்துவதை விட இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் கடன் வாங்கும்போது, வங்கி, செயலாக்கக் கட்டணம், வட்டி மற்றும் கோப்புக் கட்டணங்கள் மற்றும் பிற வகையான கட்டணங்களையும் கோரலாம். நீங்கள் கடனை முன்னதாகவே அடைக்க விரும்பினால், ஃபோர்கிளோசர் கட்டணம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு அல்லது 1 வருடத்திற்குப் பிறகு என கடனை அடைப்பதற்கான காலக்கெடுவும் உள்ளது. முதலில் இந்த விஷயங்களைச் சரிபார்த்து, புரிந்துகொண்டு பின்னர் கடன் வாங்குவது நல்லது.
பெரும்பாலும் குறைந்த இஎம்ஐயைப் பார்த்து மக்கள் நீண்ட காலக் கடனைப் பெறுகிறார்கள். ஆனால் இதில் அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. நீங்கள் எடுக்கும் கடனின் காலம் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான வட்டியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். கடன் வாங்குவதற்கு முன், கடன் காலம், வட்டி விகிதம் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து பின்னர் உங்களுக்கு ஏற்ற காலத்திற்கான கடனை பெறுவது நல்லது.