Olympic prize money : ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவுடன் பதக்கம் மட்டுமே கொடுப்பார்களே தவிர, கூடுதலாக பணம் எல்லாம் பரிசாக கொடுக்கப்படாது.
Olympic prize money : ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்றால் பதக்கம் மட்டுமே கிடைக்கும். அங்கு பரிசுத் தொகை எல்லாம் கொடுக்கப்படாது. சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்களின் வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு கொடுப்பது மட்டுமே அவர்களுக்கான பரிசுத் தொகையாகும்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 இந்த வார இறுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு தங்கப்பதக்கம்கூட வெல்லவில்லை. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா மட்டும் வெள்ளி வென்றிருக்கிறார்.
இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் ஏற்கனவே நாடு திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பும், பாராட்டு விழாக்களுக்கும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்ற கேள்வி பரவலாக இருக்கிறது.
ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) எந்தப் பரிசுத் தொகையையும் வழங்குவதில்லை.
இருப்பினும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த நாடு, சொந்த மாநிலங்கள் மற்றும் அந்தந்த விளையாட்டு கூட்டமைப்புகள் பரிசுத் தொகையை அறிவிக்கும்.
இந்தியாவில், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் கணிசமாக சிறப்பு பரிசுத் தொகைகளை பெறுகிறார்கள். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பெரும்பாலும் அரசாங்க வேலைகள், வீடுகள் போன்றவை மத்திய மாநில அரசுகளால் கொடுக்கப்படுகின்றன.
அதேநேரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) பதக்கம் வென்ற அனைத்து இந்திய வீரர்களுக்கும் பரிசுத் தொகையை வழங்குகிறது. ஆனால் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றவர்கள் எவ்வளவு பரிசுத் தொகை கொடுக்கப்படும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தகவல்களின்படி, இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு 75 லட்சம் ரூபாய், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், வெண்கலம் வென்றவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த தொகை அதிகரித்து கொடுக்கப்படவும் பரிசீலனை நடந்து வருகிறது. அத்துடன் மத்திய மாநில அரசுகளின் சிறப்பு பரிசுத் தொகையும் கூடுதலாக கிடைக்கும்.