டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று முடிவடைந்து சூப்பர் 8 சுற்று நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் என மொத்தம் எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ளன.
இந்த நிலையில் சூப்பர் 8-இல் முதல் பிரிவில் எந்த அணிகள் இடம் பெற வேண்டும், இரண்டாவது பிரிவில் எந்த அணிகள் இடம் பெற வேண்டும் என குரூப் சுற்று முடிவடையும் முன்பே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து வைத்திருந்தது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யாருக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது? என்ற விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
தற்போது சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. பொதுவாக இது போன்ற அதிக அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர்களில் குரூப் சுற்றுகளில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கான பிரிவுகளில் இடம்பெறும் போது சரி சமமான வாய்ப்பு இருக்கும் வகையில் பிரிக்கப்படும்.
அதாவது குரூப் ஏ-வில் முதலிடம் பெற்ற அணி, குரூப் பி-யில் இரண்டாவது இடம் பெற்ற அணி, குரூப் சி-யில் முதலிடம் பெற்ற அணி, குரூப் டி-யில் இரண்டாவது இடம் பெற்ற அணி ஒரு பிரிவாக பிரிக்கப்படும்.
மற்றொரு பிரிவில் குரூப் ஏ-வில் இரண்டாவது இடம் பிடித்த அணி, குரூப் பி-யில் முதலிடம் பிடித்த அணி, குரூப் சி-யில் இரண்டாவது இடம் பிடித்த அணி மற்றும் குரூப் டி-யில் முதலிடம் பிடித்த அணி இடம் பெறும். இதன் மூலம் குரூப் சுற்றில் முதல் இடம் பிடித்த அணிகளும், இரண்டாவது இடம் பெற்ற அணிகளும் ஒரு குரூப்பில் சரிசமமாக இடம்பெறும்.
இப்போதும் அப்படித்தான் அமைந்துள்ளன. ஆனால், அது யதேச்சையாக அமைந்தது. ஒருவேளை குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் குரூப் பி-யில் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி தனது குரூப் சுற்றில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் அந்த அணி சூப்பர் 8-இல் முதல் பிரிவில் தான் இடம் பெற்று இருக்கும்.
ஏனெனில், இது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதாவது, குரூப் ஏ வில் இந்தியா சூப்பர் 8-க்கு முன்னேறினால் முதல் பிரிவில் தான் இடம் பெற வேண்டும் எனவும், அதே பிரிவில் வேறு அணிகள் முன்னேறினால் அவை இரண்டாவது பிரிவில் தான் இடம்பெற வேண்டும் எனவும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு விட்டது.
அதேபோல, குரூப் பி-யில் ஆஸ்திரேலியா சூப்பர் 8-க்கு முன்னேறினால் முதல் பிரிவில்தான் இடம் பெற வேண்டும் எனவும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதே போலவே மற்ற அணிகளுக்கும் அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் முதல் பிரிவில் இடம் பெற வேண்டுமா அல்லது இரண்டாவது பிரிவில் இடம் பெற வேண்டுமா என்பது குரூப் சுற்று முடிவடையும் முன்பே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் முடிவு செய்யப்பட்டு விட்டது. இது நியாயமான ஒரு நடைமுறை அல்ல.
இதை ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சுட்டிக்காட்டி உள்ளார். இதன் பின்னணியில் இந்திய அணியை உலகக் கோப்பையின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி வரை முன்னேற்றி விட வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நினைக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
ஏனெனில், சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒரே பிரிவில் இடம் பெற்றால், அந்த இரண்டு அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறினால், வெவ்வேறு அரை இறுதிகளில் வேறு அணிகளுடன் தான் மோதும். ஏனெனில், ஒரே பிரிவில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் அரை இறுதியில் சந்திக்க முடியாது.
இதன் மூலம், வலுவான இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதியில் சற்று பலம் குறைந்த அணிகளை சந்திக்கும் வகையில் போட்டிகள் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதில் மற்றொரு வேடிக்கையும் உள்ளது. இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறினால் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடக்கும் அரை இறுதி போட்டியில் தான் பங்கேற்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டது.
இதன் மூலம் இந்திய அணிக்கு மட்டும் எந்த பிட்ச்சில் அரை இறுதியில் ஆடப் போகிறோம் என்பது தெரியும். அதேபோல எந்த அணி எதிரணியாக வரும் என்பதையும் ஓரளவு கணித்து விட முடியும். இதன் மூலம், இந்திய அணியை அரை இறுதி, இறுதிப் போட்டி வரை கொண்டு சென்று அதன் மூலம் 100 கோடிக்கும் அதிகமான இந்திய ரசிகர்களை வைத்து அதிக வருமானம் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதுபோன்ற நியாயமற்ற நடைமுறைகளை சுட்டிக்காட்டும் சில நடுநிலை ரசிகர்கள், இனி ஒவ்வொரு உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியை நேரடியாக அரை இறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவித்து விடலாம் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.