Weight Loss Without Exercise: உடல் எடையை குறைக்க எப்போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது இல்லாமலும் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க பலரும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் என்று கூறுவர். இது உண்மை என்றாலும், உடற்பயிற்சி இல்லாமலும் உடல் எடையை குறைக்கலாம். அதற்கு சில டிப்ஸை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றாலும், அதற்கு வேறு சில வழிகளும் இருக்கின்றன. இதற்கு அதிகளவு டயட் இருக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை.
உடல் எடையை குறைப்பு என்பது நிதானித்து செய்ய வேண்டிய முயற்சியாகும். எடுத்தவுடன் இறுதி ரிசல்டை எதிர்ப்பார்ப்பதால் எந்த பயனும் கிடைக்காது. எனவே, நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு சாதகமான முடிவுகளும் உங்களை வந்து சேரும்.
எடை குறைப்புக்கு உணவு பழக்க வழக்கங்களின் மாற்றங்கள் முதல் இடத்தில் இருக்கின்றன. கவனத்துடன் சாப்பிடுதல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த, குறைந்த கலோரி உணவுகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவை எடை இழப்புக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும். உதாரணமாக, பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவைக் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை உட்கொள்வதைக் குறைப்பது ஆகியவை உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்கும் பலர் எடுக்கும் முயற்சிகளுள் ஒன்று, Intermittent Fasting. இந்த முறையில், 16/8 என்ற முறை ஒன்று உள்ளது. இதற்கு அர்த்தம், 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மீதமுள்ள 8 மணி நேரத்தில் அன்றைய நாளுக்கு உடலுக்கு தேவயான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் 14/10 முறையையும் பின்பற்றுவர். இதனாலும் வெயிட் லாஸ் செய்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இந்த டயட் முறையை கர்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், உணவு இதய நோய் உள்ளவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள் போன்றோர் பின்பற்றக்கூடாது.
வாழ்க்கை முறைகளை மாற்றுவதாலும் நாம் உடல் எடையை எளிமையாக குறைக்க முடியும். குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்வது, அதிகாலையில் எழுந்து கொள்வது, மன அழுத்தத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்வது போன்றவை நமது உடலில் பல ஹார்மோன்களை சுரக்க உதவும். இதனால் நமது உடல் ஒரு நல்ல சுழற்சி முறைக்கு ஆட்படுத்தப்படும். இதனால் உடல் எடையும் சிரமம் இன்றி குறையும்.
ஒரு நாளில், ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் பின்னாளில் நல்ல பலன்கள் நம்மை தேடி வரும். இதுவும் சிறிய வாழ்வியல் மாற்றங்களுள் ஒன்றாகும். லிஃப்டிற்கு பதிலாக படிகளை பயன்படுத்துவது, தொலைபேசியில் பேசும் போது நடந்து கொண்டே பேசுவது போன்றவை நம் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் உள்ள கொழுப்பின் அளவும் குறையலாம்.
ஒரு சிலருக்கு, அவர்களின் உடலில் இருக்கும் பிரச்சனைகளால் மருத்துவர்களின் உதவியின்றி குறைக்க இயலாது. இதற்கு, மருத்துவர்களின் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொண்டு எடையை குறைக்கலாம். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் நிலையும் வரலாம். எதை செய்தாலும், உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்குமா என்பதை மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் செய்வது நல்லது.