Budget 2024 Expectations: இம்மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர்களின் PF அடிப்படையிலான ஊதிய உச்சவரம்பு உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
1952ஆம் ஆண்டில் 300 ரூபாயாக இருந்த ஊதிய உச்சவரம்பு தற்போது 15 ஆயிரம் ரூபாயில் இருக்கிறது. கடைசியாக 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் மாற்றப்பட்டது.
நடந்து முடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. மேலும், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் இந்த அரசின் பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அந்த வகையில், வரும் ஜூலை 23 அல்லது 24 ஆகிய தேதிகளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், வரும் பட்ஜெட்டின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் வருங்கால வைப்பு நிதிக்கான அதிகபட்ச ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மாதச்சம்பளம் வாங்கும் அத்தனை ஊழியர்களுக்கும் இது மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இதனால் உங்கள் சம்பளத்தில் இருந்து கூடுதலாகவும் PF இனி பிடித்தம் செய்யப்படலாம்.
இப்போது வருங்கால வைப்பு நிதிக்கான ஊதிய உச்ச வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது கடந்த 2014ஆம் ஆண்டு 6 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஊதிய உச்சவரம்பை உயர்த்த தொழிலாளர் அமைச்சகம் ஒரு பரிந்துரையை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஊதிய உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் 10 ஆண்டுகளுக்கு பின் ஊதிய உச்சவரம்பில் மாற்றம் வரும் எனலாம்.
ஊதிய உச்சவரம்பு உயரும்போது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும், PF கணக்கில் தொழிலாளர்களின் சேமிப்பும் உயரும் எனலாம். ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் துறையின் ஊழியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனலாம்.
மேலும், ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) 2017ஆம் ஆண்டில் ஊதிய உச்சவரம்பை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது. EPF மற்றும் ESIC ஆகியவை கீழ் ஊதிய உச்சவரம்பு என்பது ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தொழிளாளர் அமைச்சகம் கூறுகிறது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952இன் படி, ஊழியரின் கணக்கில் ஊழியரும், அந்த நிறுவனமும் வைப்பு தொகையை செலுத்த வேண்டும். 12%-12% என இரண்டு தரப்பும் பங்களிக்கும். இதில் ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செலுத்தப்படும் தொகை முழுவதுமாக PF கணக்கிற்கு செல்லும். நிறுவனம் அளிக்கும் தொகையில் 8.33% தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு, 3.67% தொழிலாளர்களின் PF கணக்கிற்கும் செல்லும்.