இங்கிலாந்தின் சோமர்செட்டில் கிளாஸ்டன்பரி திருவிழா 2022 ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது இது 50 வது ஆண்டு விழா என்பதால் மட்டுமா? ஐம்பதாம் ஆண்டு விழா என்பதோடு, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருடங்கள் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் நடைபெற்றது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளாஸ்டன்பரி திருவிழா ஐந்து நாள் நிகழ்வாக ஜூன் 22 புதன்கிழமை தொடங்கி ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று கோலகலாமாக நிறைவடைந்தது. சர் பால் மெக்கார்ட்னி, பில்லி எலிஷ் என பலரின் இசை நிகழ்ச்சிகள் களைகட்டின. இசை விழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்...
இளைஞரான பில்லி எலிஷ், கிளாஸ்டன்பரியில் ஈர்க்கும் நிகழ்ச்சியை வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளிச் சென்றார். அழகாகவும் காணப்பட்ட பில்லி,. 'பரி எ ஃப்ரெண்ட்' மற்றும் 'பேட் கை' போன்ற அவரது மிகப்பெரிய வெற்றிப் பாடல்களைப் பாடினார். பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை மறுத்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பில்லி எலிஷ், தீர்ப்பு வெளியான நாள், "பெண்களுக்கு ஒரு இருண்ட நாள்" என்று கூறி 'Your Power' என்ற பாடலை அறிமுகப்படுத்தினார்.
சர் பால் மெக்கார்ட்னி அமெரிக்க ராக் லெஜண்ட்களான டேவ் க்ரோல் மற்றும் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை பிரமிட் மேடைக்கு அழைத்தார், மூவரும் இணைந்து சனிக்கிழமை இரவு விழாவில் பவர் பேக் செய்யப்பட்ட நிகழ்ச்சியை வழங்கினர்.
அமெரிக்க பாடகி-பாடலாசிரியர் ஒலிவியா ரோட்ரிகோ சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சி நடத்தினார். தென்மேற்கு இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள பில்டன் கிராமத்தில் நடைபெற்ற ஐந்து நாள் நிகழ்வில் பல சர்வதேச கலைஞர்கள் கலந்துக் கொண்டனர்.
பிரிட்டிஷ் பாடகர்-பாடலாசிரியர் ஜாய் க்ரூக்ஸ் கிளாஸ்டன்பரி விழாவில் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு திரும்பியதால் இந்த வாரம் 200,000க்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் கூடி மகிழ்ந்தனர்.
உக்ரேனிய ராப் இசைக்குழுவான கலுஷ் இசைக்குழுவின் உறுப்பினர்கள் அருமையான நிகழ்ச்சியை வழங்கினார்கள். நாட்டுப்புற பாடல்கள், ராப் மற்றும் ஹிப்-ஹாப் போன்ற தனித்துவமான பாணிகளின் கலவைக்காக அறியப்பட்ட இந்த இசைக்குழு, யூரோவிஷன் பாடல் போட்டி 2022 இன் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேகன் தி ஸ்டாலியன் சனிக்கிழமை இரவு (22022 June 25) முழு கருப்பு வண்ண ஆடை அலங்காரத்தில் கலக்கினார். கருக்கலைப்பு உரிமைகள் மீதான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தவர்களில் மேகனும் ஒருவர்.