Ezharai Nattu Sani: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். ஒவ்வொரு நபரும் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு அவர் பலன்களை அளிக்கிறார். சனியை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை. பொதுவாக சனியின் கோபப்பார்வை குறித்த அச்சம் அனைவருக்கும் இருக்கும். அவரது கோபத்தை யாரும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. சனியின் தாக்கத்தால் மக்கள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த காலத்தில் மக்களின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் தோன்றும். பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனினும், ஏழரை ஆண்டு கால முடிவில், சனி பகவான் பல வித நன்மைகளை செய்துவிட்டுச் செல்வார். மேலும், இந்த காலகட்டத்திலேயே நாம் சில நல்ல செயல்களை செய்வதன் மூலமும், சில பரிகாரங்களை செய்வதன் மூலமும், சனியின் அருளை பெற்று, தீவினைகளை குறைக்கலாம்.
ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் பைரவரை வழிபடுவது அபரிமிதமான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும். அஷ்டமியில் பைரவரை கோயிலில் சென்று தரிசிக்கலாம். தினமும் பைரவர் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.
சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது, சனி சாலிசா சொல்வது நல்ல பலன்களை அளிக்கும். பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது நல்லது.
அரச மரத்தடியில் நீர் விட்டு, தீபம் ஏற்றி, மரத்தை சுற்றி வந்து வழிபடலாம். இதை தினமும் செய்யலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் செய்வது சிறப்பு நன்மைகளை அளிக்கும்.
ஏழை எளியவர்கள், தேவையில் இருப்பவர்கள் என இப்படிப்பட்ட நலிந்தோருக்கு செய்யும் உதவிகள் மூலம் சனி பகவான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறார். ஆகையால், முடிந்தபோதெல்லாம் தேவையில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகுந்த நன்மை தரும்.
ஆஞ்சநேயரின் பக்தர்களை சனி பகவான் தொல்லைப்படுத்துவதில்லை. ஆகையால் ஏழரை சனி காலத்தில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது நன்மை பயக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)