EPS Calculator: உங்களின் 30 வயதில் 25 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெற்றால், உங்களின் ஓய்வு காலத்தில் எவ்வளவு தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் எனலாம். இதில் பணியாளரின் பங்களிப்பு மட்டுமின்றி அவர் பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பும் இருக்கும். ஆனால், நிறுவனம் பங்களிக்கும் தொகை என்பது முழுவதுமாக பணியாளர்களின் கணக்கிற்கு போகாது. நிறுவனத்தின் 12% பங்களிப்பு என்பது 3.67% பணியாளர்களின் EPF கணக்கிற்கும், 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் (EPS) செல்லும்.
ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் (EPS) திட்டம் என்பது ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்கு பிறகு பயன்பளிக்கக் கூடியதாகும். இதற்கு தகுதிபெற 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகளாகும்.
ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என்பது 1995ஆம் ஆண்டு நவம்பர் மாத்தில் பணியாளர்களின் நலன்களுக்காக தொடங்கப்பட்டது. நீங்கள் தனியார் துறையில் 10 ஆண்டுகள் சேவையாற்றினால் உங்களின் 58 வயதில் உங்களுக்கு EPS மூலம் ஓய்வூதியம் கிடைக்கும்.
நீங்கள் உங்களின் 50 வயதிலேயே ஓய்வூதிய தொகையை பெற வேண்டுமானால், குறைவான வட்டி விகிதத்துடன் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரத்தில் 2 வருடங்கள் நீட்டித்தால் அதாவது 60 வயதில் ஓய்வூதிய தொகையை பெறுபவர்களுக்கு 4% வட்டி விகிதம் அதிகப்படுத்தப்படும்.
இந்த EPS தொகை என்பது உங்களின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் உங்களின் ஓய்வூதியத்திற்கான பணிக்காலம் ஆகியவற்றுடன் சேர்த்து கணக்கிடப்படும். உங்களின் சராசரி சம்பளத்தை, உங்களின் ஓய்வூதியத்திற்கான பணிக்கால எண்ணிக்கையுடன் பெருக்கி, இதன் கூட்டுத்தொகையை 70 ஆல் வகுத்தால் உங்களின் EPS தொகை கிடைக்கும்.
சராசரி சம்பளம் என்பது உங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை சேர்த்தால் வரக்கூடியதாகும். ஓய்வூதியதற்கான காலம் என்பது நீங்கள் வேலைப்பார்த்த காலம் எனலாம். அதாவது 10 ஆண்டுகள் குறைந்தபட்சம் பணியாற்றியிருக்க வேண்டும். அதிகபட்சம் 35 ஆண்டுகள் பணியாற்றலாம்.
இப்போது அடிப்படை ரூ.15 ஆயிரம், பென்ஷன் சம்பளமாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒருவர் ஓய்வு காலத்திற்கு பின்னர் ஓய்வூதியமாக ரூ.1000 முதல் ரூ.7500 வரை பெறலாம்.
அதாவது, இப்போது 30 வயதில் இருந்து அடுத்த 28 வருடங்களுக்கு ரூ.15 ஆயிரத்தை பென்ஷன் சம்பளமாக கணக்கிடலாம். அதாவது 15 ஆயிரத்தை, 28 ஆல் பெருக்கி, 70 ஆல் வகுத்தால் 6 ஆயிரம் வரும்.
அடிப்படை பென்ஷன் தொகை தற்போது 15 ஆயிரம் ரூபாய் என்பது வருங்காலத்தில் 21 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசால் உயர்த்தப்டலாம். அப்படி உயர்த்தப்பட்டால் பலன்களும் அதிகமாகும்.