EPFO Rules: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, பிஎஃப் கணக்கு இருக்கும். நீண்ட காலம் சேமிப்பு திட்டமான இதில், ஊழியர்களின் பங்களிப்புடன், பணியில் அமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது முதலாளியின் பங்களிப்பும் இருக்கும்.
பிஃஎப் கணக்கில் இருந்து, பிடித்தம் செய்யப்பட்டு முதலீடு செய்யும் பணத்தை, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். எனினும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக குறிப்பிட்ட அளவு தொகையை ஊழியர்கள் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்.
EPFO என்னும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்தியாவில் உள்ள அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் என அனைத்து வகை ஊழியர்களின், பிஎப் சேமிப்பு கணக்கு தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது.
பிஎஃப் கணக்கில் வரவு: அரசு பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்கள் பெறும் அடிப்படை சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. முதலாளியும், இதற்கு சாமான தொகையை கணக்கில் போடுவார். ஓய்வு காலத்திற்கான நிதி கார்பஸை உருவாக்கும் சிறந்த திட்டம் இது.
ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பின் மூலம், அடிப்படை சம்பளத்தின் 24 சதவீத தொகை, பிஎப் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. ஊழியர்களின் ஓய்வு கால நன்மைகளை கருத்தில் கொண்டு, செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், ஓய்வு பெறும் போது ஊழியர்கள் பெரும் தொகையை பெறுகின்றனர்.
அவசர கால தேவைகளுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின், 68J விதிகளின்படி, ஊழியர்கள் பிஎப் கணக்கில் இருந்து, ஓய்வு பெறுவதற்கு முன்பே பெற்றுக் கொள்ளலாம். அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சை, இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம், காசநோய், தொழுநோய் போன்ற சிகிச்சைகளுக்கு, முன்பணம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: அவசர தேவைக்காக பணத்தை பெற, EPFO வின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரியில், உங்கள் UAN நம்பர் பாஸ்வோர்ட் உள்ளிட்ட தகவல்களை நிரப்பி லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு விவரங்கள்: 'Online Services' என்ற மெனு பாருக்கு சென்று ‘Claim (Form-31, 19, 10C & 10D)' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்க்கவும். விவரங்களைச் சரிபார்த்த பின்னர் பிஎஃப் அமைப்பின் டேர்ம்ஸ் & கண்டிசன்களை ஏற்றுக் கொள்ளவும்.
பிஎஃப் கிளைம்: பின்னர் ‘Proceed For Online Claim' என்பதை கிளிக் செய்து ‘Medical emergency’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீங்கள் கிளைம் செய்த தொகை உடனடியாக உங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
பிஎப் கணக்கு இருப்பை அறிய: உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை, உங்கள் செல்போனிலிருந்து 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் அறியலாம். உமங் (UMANG) என்ற செயலி மூலமும் உங்களது பிஎப் கணக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.