Tamil Nadu Marriage Scheme | கணவனை இழந்த பெண்களின் மகள் திருமணம் செய்ய தமிழ்நாடு அரசு அளிக்கும் நிதியுதவி பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Marriage Assistance Scheme | தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் (EVR Maniammai marriage fund scheme) நடைமுறையில் இருக்கிறது.
இந்த திட்டத்தில் கணவனை இழந்த விதவைகளின் மகள் திருமணத்தின்போது இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து திருமண நிதியுதவி பெறலாம். கணவனை இழந்த பெண்கள் குடும்ப பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் அல்லது திருமணத்திற்கு முதல் நாள் வரை அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு கல்வித் தகுதி தேவையில்லை. படிக்காத பெண்களுக்கு ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு கிடைக்கும். பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு கிடைக்கும்.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க வயது சான்று கொடுக்க வேண்டும். திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும். இருப்பிட சான்று, சாதி சான்று, மணமகளின் கல்விச் சான்று டி.சி மற்றும் மார்க் சீட் கொடுக்க வேண்டும். திருமணப் பத்திரிக்கை, ரேஷன் கார்டு, கொடுக்க வேண்டும்.
வட்டாட்சியரிடமிருந்து பெற்ற விதவை சான்று அளிக்க வேண்டும். வருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் விதவை பெண்களின் மகள்களுக்கு நிதியுதவி கிடைக்கும்.
இதேபோல், தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்த பெண்கள் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலே சொல்லப்பட்டுள்ள ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நிதியுதவியைப் பொறுத்தவரை கல்வி தகுதி இல்லாதவர், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள தொகையின் அடிப்படையில் நிதியுதவி கிடைக்கும்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் என்ற பெயரில் விதவை மறுமணத்துக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற மறுமணம் முடிந்த 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் விதவையின் வயது திருமணத்தின் போது 20 வயது முடிந்திருக்க வேண்டும்.
முதல் கணவரின் இறப்பு சான்று, முதல் திருமண பத்திரிக்கை இரண்டாம் திருமண பத்திரிக்கை, திருமணத்திற்கு முதல் நாள் வரை விதவையாக வாழ்ந்தார் என்ற சான்று, விதவை மறுமணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு இதுதான் முதல் திருமணம் என்பதற்கான சான்று, மணமகனின் வயது சான்று (40-க்குள் இருக்க வேண்டும்), இருப்பிட சான்று, சாதிச்சான்று கொடுக்க வேண்டும். வருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி இல்லாத பெண்களுக்கு ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு கிடைக்கும். பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு கிடைக்கும்.