திருவிழாக்களில் நீங்கள் திடீரென்று கூடுதல் பணம் பெற்றால், உங்கள் மகிழ்ச்சி நிச்சயமாக இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும். இதை மனதில் வைத்து தமிழக அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உழவர் திருநாளுக்கான பொங்கல் போனசைப் பற்றி இன்று அறிவித்தார். பொங்கல் திருநாளைக் கொண்டாட, ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 2500 ரூபாய் ரொக்கமும் பொங்கல் பரிசு பையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் கூறினார்.
பொங்கல் பண்டிகை தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகையாகும். தமிழ் மக்கள் மற்றும் தமிழ் விவசாயிகளின் வாழ்வில் பொங்கல் திருநாளுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் மிகவும் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
2021 ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் ரொக்க பணமும் பொங்கல் பரிசு பையும் விநியோகிக்கப்படும் என முதல்வர் இன்று தெரிவித்தார். சுமார் 2.6 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணமும் பொங்கல் பரிசும் அளிக்கப்படும். இந்த பரிசு பையில் சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள் இருக்கும்.
நியாய விலைக் கடைகளில் (Ration Shops) இந்த பொருட்களை விநியோகிப்பதற்கு முன்பு, பயனாளிகளுக்கு அவரவர் வீடுகளிலேயே அரசாங்கம் மூலம் இவற்றிற்கான டோக்கன்கள் வழங்கப்படும். ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்வதற்கான தேதி மற்றும் நேரம் இந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
"அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, 20 கிராம் முந்திரி மற்றும் திராட்சையும், கரும்பு, 8 கிராம் ஏலக்காய் ஆகியவையும் வழங்கப்படும். இவை ஒரு துணி பையில் நேர்த்தியான முறையில் பேக் செய்யப்பட்டு அளிக்கப்படும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) கூறினார்.
கடந்த காலங்களில் இருந்தது போல அனைவருக்கும் கரும்பு துண்டுக்கு பதிலாக ஒரு முழு கரும்பு அளிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.