Jasprit Bumrah: உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் செய்திராத புதிய சாதனை ஒன்றை இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்துகாட்டி உள்ளார். அதுகுறித்து இதில் காணலாம்.
சுமார் ஓராண்டு இடைவெளிக்கு பின் பும்ரா கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அறிமுகமான ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்திருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன், இந்திய அணியின் வருங்கால வீரர்களை வழிநடத்த இருப்பவர் என பெருமைகளை கூறினாலும் பந்துவீச்சில் இவரின் திறன் என்பது சொல்லி அடங்காதது.
தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. 3ஆவது போட்டி வரும் பிப். 15ஆம் தேதி தொடங்க உள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஜஸ்பிரித் பும்ரா எனலாம். 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவுக்கு நல்ல முன்னிலையை பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து, 2ஆவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி வந்த இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், ஃபோக்ஸ், ஹார்ட்லி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2ஆவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 33.1 ஓவர்களை வீசிய பும்ரா 91 ரன்களை மட்டும் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.
ஜஸ்பிரித் பும்ரா முதல் டெஸ்டிலும் 6 விக்கெட்டை வீழ்த்தியிருந்த நிலையில், மொத்தம் 15 விக்கெட்டுகளை இந்த இரண்டு டெஸ்டில் வீழ்த்தி உள்ளார். அஸ்வினே இந்த தொடரில் 9 விக்கெட்டுகளைதான் வீழ்த்தியிருக்கிறார். பும்ராவின் இந்த அசூர ஆட்டம் அவரை டெஸ்ட் அரங்கின் பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நிலையில், பும்ரா முதலிடத்தில் தற்போது வந்துள்ளார். டெஸ்டில் இது அவருக்கு முதல்முறையாகும். இதற்கு முன் டெஸ்டில் 3ஆவது இடம் வரை மட்டுமே அவர் வந்துள்ளார்.
பும்ரா இதற்கு முன் வெவ்வேறு காலகட்டத்தில் ஓடிஐ மற்றும் டி20 அரங்கிலும் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்துள்ளார். இதன்மூலம், மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.