Health Benefits of Cardamom: இந்திய சமையலறையில், பிரதானமாக பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்க, இனிப்பு வகை உணவுகளுடன், குருமா பிரியாணி போன்ற கார உணவுகளிலும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாகவே, பாரம்பரிய மருத்துவத்தில், பல நோய்களுக்கான மருந்தாக ஏலக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனித்துவமான சுவையையும் மணத்தையும் கொண்ட ஏலக்காயின் மருத்துவ ரீதியான பல பயன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஏலக்காய்: ஏலக்காயில், வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நியாஸின், ரிபோஃப்ளேவின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. இதயம் முதல் நுரையீரல் வரை, பல்வேறு உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு ஏலக்காய் சிறந்த தேர்வாக இருக்கும்.
இரத்த அழுத்தம்: உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு, ஏலக்காய் நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
புற்றுநோய்: ஏலக்காயில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி அழிக்கும் சேர்மங்கள் உள்ளன. புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் ஆற்றலை செல்களுக்கு வழங்குகிறது. ஏலக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது, ஆய்வுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
செரிமான ஆரோக்கியம்: குமட்டல், வாயு, வயிற்று உப்பிசம், வாந்தி உள்ளிட்ட செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் திறன் ஏலக்காய்க்கு உண்டு. இரைப்பை புண், வயிற்றுப்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகவும் ஏலக்காய் இருக்கும்.
வாய் துர்நாற்றம்: ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டு மென்றால் வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்குவதோடு, சுவாசத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் காரணமாகத்தான் மவுத்ஃப்ரெஷ்னர் வகைகளில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
நுரையீரல் ஆரோக்கியம்: நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை வழங்கி வலுவூட்டும் ஆற்றல் கொண்ட ஏலக்காய், ஆஸ்துமா நோய்க்கு அரோமாதெரபியாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் ஏலக்காய் உதவும்.
இரத்த சர்க்கரை அளவு: ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பயனுள்ள மசாலாவாக ஏலக்காய் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.