நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். அந்தவகையில் அவரி பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.
பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன். இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி.
கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.
அதன் பின் குழந்தை நட்சத்திரமாக பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்தார். அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷனுடன் கமல் நடித்துள்ளார்.
கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான். 1974 ஆண்டு கன்னியாகுமரி என்ற மலையாள படம் மூலம் கதாநாயகனாக கமல் உருவெடுத்தார்.
1970 களில் கமல் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அவை நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது. இவை அனைத்தும் வெற்றி படங்கள்.
கமல் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியது அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாகதான். கே. பாலசந்தர் இந்த திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்காக, கமலுக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது.
அந்த பின் நடிகர் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார்.
ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமலஹாசன். கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா. ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமலஹாசன்தான்.
ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமலஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.
மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் கமல். கமல் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல். அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா.
கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டுள்ளது. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் விருதையும் பெற்று இருக்கிறார்.
கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து 2005-ம் ஆண்டு கெளரவித்தது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம். கமலின் அற்புதமான நடிப்புதிறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா ஆகிய இரண்டு திரை ஆளுமைகளின் முதல் பட நாயகன் கமலஹாசன்தான். பாலுமகேந்திராவின் முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த கோகிலா. பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.
கமல் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா`.
முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். கமல் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.
கமல் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார். பின் அந்த நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது கடந்த ஓராண்டாக சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்வீட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் கமல்.
அவருக்கு டிவீட்டரில் சும்மார் 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்.