லாஸ் ஏஞ்சல்ஸ்: அடுத்த ஆண்டு ஆஸ்கார் விழாவை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கும் முடிவை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அறிவித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டு முழுவதும் படங்களின் வெளியீட்டு அட்டவணையில் இடையூறு ஏற்பட்டதால் ஆஸ்கார் 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறும்.
போட்டிக்கான நுழைவுக்கான தகுதி காலம் 2020 டிசம்பர் இறுதி முதல் 2021 பிப்ரவரி இறுதி வரை இரண்டு மாதங்கள் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் தியேட்டர்கள் மூடப்பட்டு திரைப்படங்கள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி நிற்கின்றன. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கிக் கிடக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் ரிலீசுக்கு தயாரான படங்களை இணையதளங்களில் ஒளிபரப்பி வருகிறார்கள். அடுத்த வருடம் (2021) பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது 93வது ஆஸ்கார் விருதுகள் இனி திட்டமிட்டபடி பிப்ரவரி 28 அன்று நடைபெறாது என்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நேற்று அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக, 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.