லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில் சில நாள்களுக்கு முன்னர், 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி ஒன்று நடக்க ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி பெரும்பான்மையாக தமிழ்ப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாகும். ஆனால் இது குறித்து தெரியாத பல வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் அதிகம் பாடியதால், வட இந்தியர்கள் பாதியிலேயே வெளியேறிவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் தமிழ்ப் பாட்டு மட்டும்தான் பாடுவீர்களா? என்ற பதிவு செய்துள்ளனர். இந்த சர்ச்சைக்கு ஆதரவாக தமிழ்த் திரை நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
இதுகுறித்து ரஹ்மான் கூறியது:-
'எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த பாடல்களைத் தர முயல்கிறோம். நாங்கள் நேர்மையாக இருக்க முயல்கிறோம். இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்' என்று பொதுவாகத் தெரிவித்தார்.
இதையொட்டி, நடிகர் தனுஷ் அவரது டிவிட்டர் பக்கத்தில்:-
'ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மொழிகள் கிடையாது. அவரது மொழி, இசை மட்டும்தான். வேறொன்றும் கிடையாது. ரஹ்மான் ரஹ்மான்தான்' என்று டிவிட் செய்துள்ளார்.