ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: ஜி.வி.பிரகாஷ்

"ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக் கொள்கிறோம். இனி இது வேண்டாம் போர்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் கோரிக்கை.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 29, 2019, 10:50 AM IST
ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: ஜி.வி.பிரகாஷ் title=

திருச்சி: சுமார் 82 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, குழந்தையின் உடற்கூராய்வுக்குப்பின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் விழுந்தார். அப்பொழுது இருந்து, கிட்டத்தட்ட சுமார் 80 மணி நேரத்திற்கு பிறகு தான் சுஜித் உடல் மீட்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு குழந்தையை மீட்பதற்கு இவ்வளவு நேரமாகுமா..? ஏன் சரியான மற்றும் விரைவாக மீட்க்கக்கூடிய இயந்திரங்கள் நம்மிடம் இல்லை? என்ற கேள்விகள் பலர் எழுப்பி வருகின்றனர். 

ஆழ்துளைக் கிணறு மூலம் ஏற்பட்ட குழந்தை சுஜீத் மரணம் இறுதியாக இருக்கட்டும். இனிமேல் எந்த உயிரும் இரையாகக்கூடாது. பயன்பாடு இல்லாத நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட அரசு உத்தரவு செய்யவேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

 

இந்தநிலையில், இளம் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், சமூக வலைதளத்தில் ஒரு கோரிக்கை வைத்து கருத்து பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக்கொள்கிறோம். உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும் #SorrySujith #RIPSujith

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Trending News