பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.
உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. தற்போது 'பாகுபலி 2' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இது குறித்து இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "கோடை விடுமுறைக்குப் பிறகு படப்பிடிப்புக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. பல மாதங்களாக நடைபெற்ற முன்னேற்பாடுகள், சண்டை காட்சி அமைப்புகள், நடிப்பு ஒத்திகைகள், கிராபிக்ஸ் ஏற்பாடுகள் என அடுத்த 10 வார படப்பிடிப்பு சவாலுக்கு தயாராக இருக்கிறோம். பாகுபலி 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு ஜூன் 13 தேதி தொடங்குகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.