சுப்ரமணியபுரம் - சுயநலங்களால் ரத்தத்தில் நனைந்த பூமி

சுப்ரமணியபுரம் படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் நிறைவடைகின்றன.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 4, 2022, 11:51 AM IST
  • சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு
  • தமிழின் பெஞ்ச் மார்க் படங்களில் சுப்ரமணியபுரமும் ஒன்று
சுப்ரமணியபுரம் - சுயநலங்களால் ரத்தத்தில் நனைந்த பூமி title=

இந்த உலகம் சுயநலத்தால் சுற்றிக் கொண்டிருக்கிறது. சுயநலம் தவறே இல்லை. ஆனால் அதன் அளவு மீறப்படும்போது விபரீதங்கள் நிகழ்கின்றன. அது மனிதர்களிடம் மட்டுமே நடக்கிறது. அப்படி மனிதர்களிடம் நடந்தால் என்னவாகும் என்பதை எளிதாக உணரவைத்த படம் சுப்ரமணியபுரம். 

அமீரின் பருத்திவீரன் மதுரையின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வழி காண்பித்தார். சசிக்குமார் மதுரையை புரிய வைத்தார். மதுரை என்றாலே ராவான கொண்டாட்டமும், ரத்த ஓட்டம் அதிகம் இருக்கும் கூட்டங்களும்தான் என காட்சிப்படுத்தும் தற்போதைய சினிமாக்களுக்கு முன்னதாகவே மதுரையின் அழகையும், அங்கு வாழ்பவர்களின் எதார்த்தமான வாழ்வியலையும் பதிவு செய்ததற்காகவே  சுப்ரமணியபுரத்தை கொண்டாடலாம்.

Sasikumar

ஒருவருக்கு ஒருவர் எதை செய்ய வேண்டுமானாலும் தயாராக இருக்கும் அழகர், பரமன், தன் நண்பர்களை தன் உலகமாக நினைக்கும் டுமுக்கான், தன்னை  வேலையில்லாதவன் என டுமுக்கான் சொல்லிவிட்டதால் திருட சென்ற காசி என பல முகங்கள். 

இளையராஜாவின் பாடல்களை மற்ற தமிழ் சினிமாக்களில் பயன்படுத்துவது தற்போது அதிகரித்திருந்தாலும் அதற்கான விதையை போட்டதும் சுப்ரமணியபுரம். சிறு பொன்மணி அசையும் பாடலுக்கு சசிக்குமார் அமைத்திருந்த காட்சிகளை பாடல் உண்மையில் இடம்பெற்றிருந்த கல்லுக்குள் ஈரம் படத்திலும் வைத்துக்கொள்ளலாம். அப்படி ஒரு அழகு, ரசனை.

Swathi

படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு சசிக்குமாரின் கதையும், காட்சியமைப்பும் எவ்வளவு உதவியதோ அதே அளவு ஜேம்ஸ் வசந்தின் இசையும் உதவியது. சுப்ரமணியபுரம் படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவை பின்னணி இசையிலும், திடீரென வாழ்க்கை சூனியமாகிப்போனால் நிலவும் விரக்தியையும், படபடப்பையும் காதல் சிலுவையில் பாடலிலும் கொண்டுவந்ததற்கு ஜேம்ஸ் வசந்தனை உச்சிமுகரலாம்.

புதுப்படையோடு வந்து இதுபோன்ற சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டை கையில் எடுத்து பெஞ்ச் மார்க்காக கொடுப்பதெல்லாம் எல்லோராலும் முடியாதது.  வைக்கப்பட்ட கதாபாத்திரப் பெயர்கள், நடிகர்களிடம் நடிப்பு வாங்கியது, முரட்டுக்காளை கட் அவுட், வீதியில் விளம்பரப்படுத்தப்படும் ரஜினி பட விளம்பரம், வீடு அமைப்புகள், பேருந்து அமைப்புகள் என சசிகுமாரின் உழைப்பு இத்திரைப்படத்தில் மிரள வைத்திருக்கும். 

Subramaniyapuram

சமுத்திரக்கனியின் பழக்கத்துக்காக கத்தி தூக்கிய கைகள் பழக்கத்தால் மட்டுமே கடைசியில் வீழும். அப்படி, பழக்கத்துக்காக என்ற ஒரு வார்த்தையால் சவுண்ட் சர்வீஸ் கடையில் மட்டும் அமர்ந்திருந்த இளைஞர்கள் தங்களுக்கு தொடர்பே இல்லாத உலகத்துக்குள் நுழைந்து ஓய்ந்து போனதை இனியும் சுப்ரமணியபுரம் போல் வேறு ஏதேனும் படங்கள் காட்சிப்படுத்துமா என்பதற்கு பதில் இல்லை.

எவ்வளவுதான் பழகினாலும் அதிகாரம் படைத்தவர்கள், அதற்கு ஆசைப்படுபவர்கள் தங்களது தன்மையை இழக்கமாட்டார்கள். உலகத்தில் எங்கு, எவர் கைகளில் கத்தி ஏறினாலும் அதற்கு பின்னாலும், அதிலிருந்து வடியும் ரத்தத்திலும் யாரேனும் ஒருவரது துரோகமோ,சுயநலமோ படர்ந்திருக்கும். அதை, மதுரையை பின்னணியாக வைத்து வெளிப்படுத்தியது சுப்ரமணியபுரம். 

மேலும் படிக்க | விஜய்யை கலாய்த்துவிட்டு தற்போது நன்றி கூறும் கோமாளி இயக்குனர்!

இங்கு அனைவரும் யாரோ யாரோ ஒருவரால் துரோகத்தை சந்தித்திருக்கலாம், பிறரின் சுயநலத்தால் தங்களது வாழ்க்கையை தொலைத்திருக்கலாம். அந்த வாழ்க்கையை ஒரு முரடன் எழுதிய கவிதை போல் சசிக்குமார் இப்படத்தில் கூறியிருப்பார். அதனால்தான் அவர் படம் இயக்க வேண்டுமென்று இன்னமும் ரசிகர்கள் கேட்டுவருகின்றனர். 

Sasi, Jai

அழகரையும் பரமனையும் பொறுத்தவரை பழகியவர்கள்தான் எல்லாம் என்று பொதுநலமாக சுற்றிக்கொண்டிருக்க பழகியவர்களும், காதலித்தவளும் தங்கள் சுயநலத்துக்காக இரண்டு பேரையும் பலிகடா ஆக்குவார்கள். 

இப்படி ஒவ்வொருவரின் சுயநலத்துக்காகவும் வீழ்த்தப்பட்ட அழகர் மற்றும் பரமனின் ரத்தத்தால் நனைந்ததுதான் சுப்ரமணியபுரம். அந்த ரத்தத்தின் ஈரம் 14 ஆண்டுகள் கழித்தும் பலரிடம் காயாமல் இருக்கிறது. வாழ்த்துகள் சசி...

மேலும் படிக்க | 'உறியடி' விஜய்குமாரின் அடுத்த படம் இதுதான்! வெளியான தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News