கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் "மெர்குரி". சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் மூவி தயாராகியுள்ள திரைப்படம் இது.
தற்போது தமிழகத்தில் புது திரைப்படங்களை வெளியிடுவதில்லை என திரைத்துரையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டம் முடியும் வரை ‘மெர்குரி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை வெளியிட போவதில்லை என படத்தின் இயக்குனர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டு இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது வருகிறது. பல பேச்சு வார்த்தைக்கு பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக கூறியது. இப்படம் நேற்று தமிழ் நாட்டை தவிர்த்து உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் இந்த படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னரே திரைப்படம் தமிழகத்தில் விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானால் அதை ரசிகர்கள் பார்க்க வேண்டாம் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை பார்த்த சிலர் இப்படத்தின் கதை இதுதான் என்றும், இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இந்த சம்பவங்கள் இப்படத்தின் வணிகத்தில் மிக பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.