முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியின் 138 வது பிறந்தநாள் இன்று...

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என தமிழ் மொழியை போற்றிப்பாடிய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று!!

Last Updated : Dec 11, 2019, 09:27 AM IST
முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியின் 138 வது பிறந்தநாள் இன்று... title=

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என தமிழ் மொழியை போற்றிப்பாடிய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று!!

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11 ஆம் தேதி 1882 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். 

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். சின்னசாமி ஐயர் லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். 

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார். தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர் பாரதியார். இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. 

பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 - 17 மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909 - 1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 

பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். 

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அவர் காலமானார். 

 

Trending News