தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
தமிழ்நாட்டில் நாம் பல வித விழாக்களை, பண்டிகைகளை கொண்டாடுகிறோம். எனினும், நம் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருப்பது தைப்பொங்கல் பண்டிகை. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை (Pongal Festival) விவசாயத்திற்கான, விவசாயிகளுக்கான, விவசாயத்துக்கு உதவும், கதிரவன், பூமி, விலங்குகள், இவற்றுக்கான பண்டிகையாகும்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற கூற்றுக்கு ஏற்ப, தை மாதப்பிறப்பு நம்பிக்கையையும், நல்ல எண்ணங்களையும், நேர்மறை சிந்தனைகளையும், உழைப்புக்கான உந்துதலையும் தன்னுடம் கொண்டு வருகின்றது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்து, மஞ்சள் கொத்து கட்டிய புதுப் பானையிலிட்டு, புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் உன்னதமான விழாவாகும் தைப்பொங்கல் திருவிழா.
பொங்கல் பொங்கி வரும் அந்த தருணத்தில் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் 'பொங்கலோ பொங்கல்' என உற்சாகக் குரல் எழுப்பும்போது, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம், பாசம், செல்வம், செழிப்பு என அனைத்தும் பொங்கும்.
ALSO READ | Pongal 2022: திகட்டாமல் தித்திக்கும் தைப்பொங்கல் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்
பொங்கல் வைக்கும் நேரம்
இந்த ஆண்டு ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களிலும் பொங்கல் வைக்க பல உகந்த நேரங்கள் உள்ளன. ஜனவரி 14 (இன்று) ஆம் தேதி, காலை 6.00 மணி முதல் 9 மணி வரையிலும், பிற்பகல் 02.30 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் பொங்கல் வைக்க நல்ல நேரமாக உள்ளன.
நம் முன்னோர்கள் செய்துள்ள ஒவ்வொரு விஷயத்திலும் பல வித படிப்பினைகள் உள்ளன. அந்த வகையில், பொங்கல் என்ற ஒரு பண்டிகையில் எத்தனை வாழ்க்கைப்பாடங்களை புகுத்தி உள்ளார்கள் என்ற எண்ணம் வியப்பை அளிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும்போதும் இந்த பாடங்களையும் எண்ணிப்பார்ப்பது நமக்கு நல்லது.
பொங்கல் (Pongal) பண்டிகை நமக்கு சொல்லித்தரும் மிக முக்கியமான பாடம், நன்றி மறக்காமல் இருப்பது. நம்மில் எத்தனை பேர் நமக்கு உதவி செய்றவங்களுக்கு, அந்த உதவிக்கேற்ற நன்றியை தெரிவிக்கிறோம்? சொல்ல வேண்டும், கண்டிப்பாக சொல்ல வேண்டும். அது மனிதர்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், இயற்கையாக இருந்தாலும், நன்றி மறப்பது நல்லதல்ல.
புதிதாக பிறந்திருக்கும் இந்த தை மாதம் உலக மக்கள் அனைவருக்கும் திகட்டாத பல இனிய செய்திகளையும், முடக்கம் இல்லா முன்னேற்றங்களையும், தடையில்லா பாதைகளையும், பதட்டமில்லா பயணங்களையும் அளிக்கட்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR